சீர்காழி மூவர்
சீர்காழி மூவர், டாக்டர் சுதா சேஷய்யன், எல்கேஎம் பப்ளிகேஷன், விலை 120ரூ.
அற்புதங்களின் வரலாறு அற்புதங்களை நாம் வரலாறாக ஏற்கத் தயங்குகிறோம். பல மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அவை அற்புதங்களாக இருப்பதாலேயே நமது தர்க்கவியல் பார்வைக்கு உட்படுத்தி செவி வழிச் செய்திகள் என்று முத்திரை குத்துகிறோம் ஆனால் அற்புதங்கள் என்னவோ உலகெங்கும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுவும் நமது பாராத புண்ணிய பூமியில் அள்ளக் குறையாத வகையில் நிறைந்துள்ளன. அத்தகையதொரு அற்புதந்தான் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய சீர்காழி மூவரின் தோற்றமும் சங்கீதப் பணியும். ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் (17-18ஆம் நூற்றாண்டில்) பிறந்து தமிழிசைக்கு தனி முத்திரை அளித்த இவர்களது வரலாறும் பணியும் டாக்டர் சுதா சேஷய்யனின் எழுத்தில் மிகத் துல்லியமாகவும் சுவாரஸ்யமாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன இப்புத்தகத்தில். புனைகதை யுத்தியுடன் வரலாற்றுச் செய்திகளையும் இணைத்து, மூவரது பாடல்களின் வரிகளையும் பிணைத்து, உணர்ச்சிகரமான பக்திப் பெருக்கின் மதிப்பை முற்றிலும் உணர்ந்து சேர்த்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் ஓர் அரிய படைப்பு என்றே சொல்ல வேண்டும். முத்துத்தாண்டவர் சிவபாக்கியம் (சிதம்பரம் கோயிலின் ஆடல் பெண்டிர்) உறவை உன்னத காட்சியாகப் படம்பிடிப்பதில் ஆரம்பித்து, மாரிமுத்தாப் பிள்ளையின் வாழ்க்கை திருக்கையிலாயத்தில் நிர்ணயமாவது போன்ற ஒரு கற்பனைக் காட்சியையும் படைத்து அருணாசல கவிராயருடைய பாடல் முதல் வரிகளையே தலைப்பாக்கி பல அத்தியாயங்களில் அவர் வாழ்வையும் கீர்த்தனைகளையும் விவரித்து எழுதப்பட்டுள்ள நூலில் ஏராளமான அரிய தகவல்கள் அடங்கியிருக்கின்றன.உதாரணமாக அருணாசல கவிராயர் பல வெண்பாக்கள் இயற்றியுள்ளார் என்பதுடன் பல்வேறு தெய்வங்களைத் துதித்து தனிப்பாடல்களும் இயற்றியிருக்கிறார். மாரிமுத்தாப் பிள்ளை வெறி விலக்கல் என்னும் வகையைச் சார்ந்த பல தனிப்பாடல்கள் இயற்றியுள்ளார். (காதல் பித்து பிடித்த பெண்ணின் சதிதம் தெளிவிக்க ஆடு/கோழி பலி இருவதைச் சாடும் பாடல் வகையாம் வெறி விலக்கல்). மாணிக்கவாசகர் பதிகங்களில் ஊறித் திளைத்தே முத்துத்தாண்டவர் இசைத் தமிழ்க் கீர்த்தனைகள் பொழிய ஆரம்பித்தார். நூலாசிரியரின் எழுத்துத் திறன் மட்டுமின்றி, அவரது தமிழ்புலமை, இசை-நடனக் கலை ஞானம், சமயம் சார்ந்த செய்திகள் குறித்த அவரது ஆமான அறிவு, எல்லாவற்றுக்கும் மேலாக, அற்புதங்களை அறிவால் கூறுபோடாமல், முழுமையான நம்பிக்கையுடன் ஏற்கும் பக்தி பாங்கு, அனைத்தும் சேர்ந்தே சீர்காழி மூவர் புத்தகத்துக்கு மதிப்புக் கூட்டுகின்றன. அற்புதங்கள் நிகழ்ந்ததற்குச் சான்றாக, மூவரின் பாடல்களுமே இருக்கின்றனவே, போதாதா? என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் அழகுக்க ஒரு தனி பாராட்டு. இசையும் மொழியும் இணைந்த இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு ஸ்புரிக்கும் அற்புதங்கள் அல்லவா மூவரின் தமிழ்க் கீர்த்தனைகள். எழுத்துப் பிழைகளே இல்லாத நூலில் ஒரு குறை சீர்காழி மூவரின் தோற்றச் சித்திரங்கள் இடம் பெறாமல் போனதுதான். -சீதாரவி நன்றி: கல்கி, 16/5/2013