குண்டூசி பி.ஆர்.எஸ்.கோபால் சரித்திரமும் ஏடுகளும்
குண்டூசி பி.ஆர்.எஸ்.கோபால் சரித்திரமும் ஏடுகளும், வாமணன், மணிசாகர் பதிப்பகம், சென்னை 108, பக். 448, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-1.html
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல. சங்கீதம், நாட்டியம் போல அதுவும் ஒரு சிறந்த கலை வடிவமே என்ற கொள்கையுடையவர் குண்டூசி கோபால். சினிமா நிருபராகவும், சினிமா விமர்சகராகவும், சினிமா இதழாசிரியராகவும் அவர் தமிழ் சினிமா உலகுக்குப் பங்காற்றியவர். குறிப்பாக இந்திப்பட, வெளிநாட்டுப் பட மோகம் அதிகமிருந்த காலகட்டத்தில் தமிழ்ப் படங்களைப் பற்றிய செய்திகளை முன்னிலைப்படுத்தியவர். குண்டூசி கோபாலின் பள்ளிப்படிப்பு, எழுத்தாளர் கல்கியுடனான சந்திப்பு, மோட்டார் கம்பெனி வேலை, பத்திரிகையில் உதவி ஆசிரியரானது. சினிமா பகுதிக்கு ஆசிரியரானது. வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியது. சொந்தமாகப் பத்திரிகை தொடங்கி நடத்தியது. தமிழ் பத்திரிகையில் முதன்முதலாக வாசகர்கள் கேள்விகளுக்கு ஆசிரியர் பதிலளிக்கும் கேள்வி பதில் பகுதியைத் தொடங்கியது. எளிமையாக நடந்த அவருடைய திருமணம், எம்.கே.தியாகராஜ பாகவதரைச் சந்தித்து, அவருடைய துணிச்சலான கருத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவரைக் கொலை செய்ய முயன்றது போன்ற பல தகவல்கள் ஒரு சினிமாவின் சுவாரஸ்யத்தோடு இந்நூலில் எழுதப்பட்டுள்ளன. இவை தவிர குண்டூசி கோபால் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட சினிமா விமர்சனங்களும், குண்டூசியில் வெளிவந்த சுவையான துணுக்குகளும் இப்போதும் படிப்பதற்கு மிகவும் சுவையாக உள்ளன. குண்டூசி கோபலின் பதில்கள் நேர்மையாகவும், துணிவுடனும் யாரையும் புண்படுத்தா வண்ணமும் உள்ளன. எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பா, தி.ஜ.ரங்கநாதன் போன்றவர்கள் கோபாலோடு பத்திரிகைத் துறையில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதும், பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் இவரின் இளைய சகோதரர் என்பதும் வியப்பான செய்திகள். நன்றி: தினமணி, 10/6/2013
—-
விலங்கின வினோதங்கள், ஆர். கோவிந்தராஜ், நன்னூல் அகம், ஏ-8, 29, சௌத் கெனால் பாங்க் ரோடு, சென்னை 28, பக். 150, விலை 70ரூ.
எறும்பு முதல் யானை வரை பல்வேறு ஜீவராசிகளின் வாழ்க்கையில் ஏராளமான சுவாரஸ்யங்கள் மலிந்து கிடக்கின்றன. இவை சாதாரண மக்கள் படிக்க முடியாத அறிவியல் மொழியில் ஆங்கில புத்தகங்களில், வல்லுனர்களுக்கு மட்டுமே வசப்பட்டு முடங்கிக் கிடக்கின்றன. ஆசிரியர் பல நுட்பங்களைக் கேள்வி பதில்களாக்கி எளிமையாகத் தருகிறார். இதோ ஒரு உதாரணம், கேள்வி-பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் கழுதைப்புலியால் ஏதேனும் பயன் உண்டா? பதில்-என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? பிற விலங்குகள் ஒதுக்கித் தள்ளி மாமிச மிச்சங்களையும், அழுகும் பிணங்களையும் ஆர்வத்தோடு ஒப்பிடும் பிராணிகளில் நம்பர் ஒன் இதுதான். அடப்போடா என்று இது விட்டுவிட்டால் காடு என்னவாகும்? நாலைந்து மாசத்தில் நாறிப் போய்விடாது? வனத்துப்புரவாளர் என்ற செல்லப்பெயர் கழுதைப்புலிக்கு உண்டு. குழந்தைகள் பெரியவர் இருவருக்குமேயான பொது அறிவுக்களஞ்சியம். -எஸ்.குரு. நன்றி: தினமலர், 25/12/2011
