செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உரைகள்
செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள், உரைகள், பதிப்பாசிரியர் இராம. குருநாதன், முதல் தொகுதி பக். 416, விலை 275ரூ., இரண்டாம் தொகுதி விழிகள் பதிப்பகம், பக். 416, விலை 275ரூ.
தருமை ஆதினத்தினத்தின் மூலம் செந்தமிழ் காவலர் என்ற பட்டம் பெற்ற சிதம்பரநாத செட்டியார், மாணவர் பருவத்திலேயே தான் பயின்ற கல்லூரியில், ஆகிலத்திலேயே எழுதப்பட்டு வந்த அறிக்கைகளைக் கண்டித்து, பல எதிர்ப்புகளையும் தாண்டி தமிழில் எழுதி, மாணவர்களிடையே தமிழ் உணர்வை வளர்த்தவர். பிராங்க்ளின் கெல், ஜி.யு.போப், நினைவு தங்கப் பதக்கங்களைப் பெற்றவர். கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனப் பல்துறை வித்தகராக விளங்கியவர். வெளிவந்துள்ள இரு தொகுதிகளிலும் மொத்தம் 109 கட்டுரைகள் உள்ளன. தமிழ் மொழியின் சிறப்பு, சங்க இலக்கியங்களின் பெருமை, தாய்மொழி கல்வி பயிற்றுவிப்பதன் அவசியம். பழமொழிகளின் அருமை, தமிழர் வழிபாடு, நாட்டுப் பாடல்கள், நீதி நூல்களில் இலக்கிய நலம், நாட்டு முன்னேற்றம், மொழிப்பற்று, மரபும் இலக்கிய வளர்ச்சியும், செல்வங்கள், மாணவர்களை மன்னிக்கலாம், அலுவல்மொழி, இந்தித் திணிப்பும் ஆங்கிலப் பயன்பாடும், தமிழக் கோயில் வழிபாட்டுமொழி, தமிழ் காட்டும் உலகு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உள்ள இக்கட்டுரைகள், பல்துறை சார்ந்தவர்களுக்குமான ஓர் அரிய அருமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பெரு முயற்சிக்குப் பிறகு, சிதம்பரநாதன் சட்ட மேலவையில் ஆற்றிய உரையினையும் தொகுத்துக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. சிதம்பரநாதனின் ஆழங்காற்பட்ட புலமைக்கும் இதிலுள்ள கட்டுரைகளின் செழுமைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது பதிப்பாசிரியரின் ஆய்வுத் தொகுப்புரை. நன்றி: தினமணி, 1/3/2015.