செம்மொழிச் சிந்தனைகள்

செம்மொழிச் சிந்தனைகள், தா. நீலகண்ட பிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், பக். 98, விலை 60ரூ.

இளம்பூரணரை பின்பற்றிய உரைக்காரர்கள்! தமிழ் இலக்கியங்களுள் காணக்கிடக்கும் சிந்தனைகளைத் தொகுத்து, ஒன்பது கட்டுரைகளாக பல்வேறு சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். ‘குறுந்தொகைப் பாடல்களில் இலக்கிய மாந்தர்கள் தம் உள்ளத்து எண்ணங்கள் முழுவதையும் வெளிப்படுத்துவதில்லை. கேட்போரின் மனநிலை, சூழல் இவற்றிற்கேற்ப, பேசுவோர் தம் உணர்வுகள் சிலவற்றைப் பேச்சிலும், மெய்ப்பாட்டிலும் வெளிப்படுத்துவர். சிலவற்றை தம் அடிமனதில்தேக்கி வைத்திருப்பர்’ என உளவியல் கோட்பாடு அமைந்திருக்கும் பாங்கை விளக்குகிறார். பிற இலக்கியங்கள் மூவேந்தர்களைப் பாட முற்பட்டபோதே, பதிற்றுப்பத்து, சேர மன்னர்களை மட்டுமே பாடும், புறநூலாக அமைந்துள்ளது. ‘மதனுடை வேழத்து வெண்டோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை நல்கும்’ என, பண்டமாற்று முறையில் அறவிலை வணிகம் செய்தமையும், சேர மன்னர்களின் அரசாட்சி, வீரம், கொடை, மக்களின் வாழ்வியல் போன்றனவற்றையும் விளக்குகிறது. பரிபாடலின்கண் அமைந்துள்ள மருத்துவ கோட்பாட்டையும், தற்காலத்திலும் நாம் பின்பற்றும் சில சடங்குகள் சங்க இலக்கியங்களிலும் சுட்டப்பட்டுள்ளன என்பதை புறநானூறு மூலமாகவும் விளக்குகிறார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை, ஒருமுறை, இருநானூறு, மும்மருந்து, நானாற்பது, ஐயைந்திணை, மணி மொழிக்கோவை என, வரிசைப்படுத்துவது புதிய சிந்தனை. முத்தொள்ளாயிரத்துள் சிற்றிலக்கிய வகைகளான உலா, பரணி போன்றவை அமைந்துள்ள திறத்தையும் நிறுவுகிறார். உரையாசிரியர் என, போற்றப்பட்ட இளம்பூரணர் உரை எளிமையும், சிறப்பும், தூய தமிழ் நடையையும் கொண்டு திகழ்ந்தது என்பதையும், பிற உரைகாரர்கள் இளம்பூரணரை அடியொற்றியே விளங்கினர் என்பதையும் சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார். அகநானூற்றுப் பாடல்களில் வரும் தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் போன்றோர் கூற்றுகள், இக்கால தகவல் தொடர்பியல் கோட்பாடுகளோடு ஒத்திசைவு பெற்றுள்ளன என்பதும் சுட்டப்பட்டுள்ளது. ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுறு நூல். -புலவர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 3/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *