செவ்வியல் இலக்கிய மணி மாலை
செவ்வியல் இலக்கிய மணி மாலை, ம.சா. அறிவுடை நம்பி, கருமணி பதிப்பகம், புதுச்சேரி 8, பக். 320, விலை 160ரூ.
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள். தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் சாரம் செவ்வியல் இலக்கியத்துக்கச் செழுமை சேர்த்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் இசைநிறைக்கிளவிகள், காப்பியங்களில் கனவுகள் ஆகிய கட்டுரைகள் ஒருமுறைக்கு இருமுறை படித்துச் சுவைக்கலாம். அந்தந்த பக்கத்திலேயே அதற்கான அடிக்குறிப்புகளைத் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. பழந்தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் இளம் ஆய்வாளர்களுக்கான சிறந்த வழிகாட்டி நூல். தமிழ் இலக்கியங்களில் மதுவிலக்கு என்ற கட்டுரை 18/1/2009இல் தினமணி தமிழ்மணியில் வெளியாகி, பின் அதே கட்டுரை 21/7/2009இல் தமிழ் ஓசை பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. இனிமேலும் இத்தவறு நிகழாமல் பார்த்துக்கெள்வது நல்லது. நன்றி: தினமணி, 22/10/2012.
—-
குடியாத்தம், முல்லைவாசன், ஆழிபதிப்பகம், 1ஏ, திலகர்தெரு, பாலாஜி நகர், துண்டலம், அய்யப்பன்தாங்கல், சென்னை 77,விலை 60ரூ.
ஆழி பதிப்பகம், தமிழின் முதல் முயற்சியாக தமிழகத்தின் முக்கிய ஊர்களின் வரலாற்றை, தகவல்களை அந்தந்தப் பகுதி எழுத்தாளர்களைக் கொண்டே எழுதி வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பற்றி வெளிவந்திருக்கும் நூல் இது. விடுதலைப் போரில் குடியாத்தம், சமூகமும் கலாச்சாரமும் பிரபலமானவர்கள் ஆகிய அத்தியாயங்கள் சுவை மிக்கவை. நன்றி: இந்தியாடுடே, 17/10/2012.