சங்க இலக்கியம் சில பார்வைகள்
சங்க இலக்கியம் சில பார்வைகள், டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 600108, பக். 248, விலை 90ரூ.
பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் ஆய்ந்து, அளந்து எழுதியுள்ள ஆராய்ச்சி நூலிது. தமிழகத்தின் தொன்மையும், சங்க காலச் சிறப்பும், பதிற்றுப்பத்தின் இலக்கிய வளமும், ஆற்றுப்படை இலக்கியத்திறனும், பாடாண் திணை, கதிரவன் ஒளி, அணி நயங்கள், வணிகத் தொன்மை, இசை மேன்மை, இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் ஆகிய பன்முகச் சிந்தனைகளில், ஆய்வுக் களம் அமைத்து நூலை எழுதியுள்ளார். குமரி மலையும், குமரி ஆறும், பழந்தமிழ் நாகரிகத்தின் அடையாளங்கள் எனவும் கூறுகிறார். ஆதிசிவன் பெற்றெடுத்து, அகத்தியர் வளர்த்தது தமிழ்மொழி என்று பெருமை பேசுகிறார். கதிரவன் பற்றிய சங்க இலக்கியச் செய்திகளை அழகாகத் தொகுத்துத் தந்துள்ளார். அவிரொளி, வெய்யவன், பகலோன், பரிதி, விரிகதிர், இரவி, ஏழயபரித் தேரோன், காய்கதிர்ச் செல்வன், ஞாயிறு ஆகிய சொற்கள், சூரியனுக்கு புகழ் சேர்க்கின்றதைப் பட்டியல் இட்டுள்ளார். பசுவின் பால் கன்றுக்கும், மனிதனுக்கும் பயன்படாது வீணாக தரையில் சுரபப்துபோல, தலைவியின் அழகு அவளுக்கும் பயனின்றி, தலைவனுக்கும் பயனின்றி வீணாவதை குறுந்தொகை, 27ஆம் பாடல் உவமையால் விளக்குகிறார். இலக்கியத்தில், அறிவியல் சிந்தனைகள் இறுதி கட்டுரை இனிக்கிறது. சி. பாலசுப்பிரமணியன் என, பெயரை முகப்பு அட்டையில் சி. சுப்பிரமணியன் என்று சுருக்கி வெளியிட்டுள்ளது விரிவான தவறுதானே? நன்றி: தினமலர், 26/1/2014.