சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்

சார்லி சாப்ளின் ஒரு தரிசனம், தி. குலசேகர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083, விலை ரூ. 150

ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்த மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். சினிமாவில், தான் பேசாமலேயே தன்னை எல்லோரும் வியந்து பேசும்படி மௌன மொழியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திக்காட்டியர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்த இவரது ஆரம்பகால வாழ்க்கை, வேதனைகளும், சோதனைகளும் நிரம்பியவை. வறுமைக்கும், மாற்றந்தாயின் கொடுமைக்கும் இடையே இவரும், இவரது அண்ணனும் வளர்ந்த விதத்தையும், தந்தையின் புறக்கணிப்பால் மன நோயாளியாகிப்போன தாயைக் காப்பாற்ற அந்த சிறுவயது சகோதரர்கள் பட்ட பாடுகளையும் படிப்பவர்களை கண் கலங்கச் செய்யும். வாழ்க்கையின் அடித்தட்டிலிருந்து உலகின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த இவரது வரலாறு, தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு. இந்நூலாசிரியர் தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குனராகவும், பல பத்திரிகைகளிலும் சிறு கதைகள், குறு நாவல்களைப் படைத்த எழுத்தாளராகவும் உள்ளதால், வாசகர்களின் கவனம் சிதறாமல் படிக்கும்படி இந்நூலை விறுவிறுப்பாக ஆக்கியுள்ளார். 1914ல் இருந்து 1967 வரை சார்லி சாப்ளின் சுமார் 95 படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சிறப்பான 50க்கும் மேற்பட்ட படங்களின் கதை சுருக்கமும், அதற்குரிய ஃபோட்டோ ஸ்டில்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அவரது சில பிரத்யேகத் தகவல்களும் படிக்க சவையானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 17/10/2012  

—-

 

குமரகுருபரர் யாப்பியல், மு. கஸ்தூரி, இளவேனில் பதிப்பகம், பக். 240, விலை 140ரூ.

300 ஆண்டுகளுக்கு முன், முருகன் அருளால் பாடத் துவங்கியவர் குமரகுருபரர். ஊமையாகப் பிறந்து, செந்தூர் முருகனால் பாடல் இயற்றும் அருள் பெற்றார். திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பாவில் பாடி செந்திலாண்டவர் அருளையும், மீனாட்சி பிள்ளைத் தமிழ்பாடி மீனாட்சி அருளையும் பெற்றவர். 14 இலக்கியங்கள் பாடியவர். இவர் பாடிய 823 பாடல்களிலும் விளங்கும் இலக்கண யாப்பு அமைப்பினை, இந்த நூல் விரிவாக ஆய்கிறது. முனைவர் பட்டம் பெற்றுத்தந்த ஆய்வேடு நூலாக மலர்ந்து உள்ளது. கோவை, கலம்பகம், மாலை, பிள்ளைத் தமிழ், குறம் போன்ற எட்டு இலக்கிய வகைகளை இயற்றி அதற்கான இலக்கண யாப்பினையும் விரிவாக்கியுள்ள, குமரகுருபரனின் இலக்கணப் புலமையை இந்நூலில் காணலாம். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 26/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *