செவ்விலக்கிய மதிப்புகள்
செவ்விலக்கிய மதிப்புகள், செ. ரவிசங்கர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 112, விலை 50ரூ.
தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர் அவர்களுள் ச.வே.சு.வும் ஒருவர். தொல்காப்பியம் முழுமைக்கும் ச.வே.சு. எளிய விளக்கவுரை எழுதியுள்ளார். தம் உரை நூலில் பல்வேறு இடங்களில் அவர் எடுத்துக் காட்டுகளை தமிழ் சார்ந்து பயன்படுத்தியுள்ள திறத்தை ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய உரை எடுத்துக்காட்டுத் திறன் என்ற இந்நூலின் முதல் கட்டுரை விளக்குகிறது. அகப்பாடலில் இருக்கும் சங்ககாலச் சூழலியல் கட்டுரையில் வாழிடச் சூழலியல், சுற்றுப்புறச் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல் போன்றவையும், தமிழர்களின் வாழ்வு முறையைக் குறுந்தொகை கொண்டும், அடித்தள மக்களின் வரலாறு பதிற்றுப்பத்தில் எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும், மக்களின் வாழ்க்கைத் தத்துவத்தை கலித்தொகை மூலமும், தமிழ்ச் சமுதாயத்தின் கண்ணாடியாக அகநானூறு எவ்விதம் திகழ்கிறது என்பதையும், புறநானூற்றை திணைக்கோட்பாட்டு நோக்கிலும், சுக்கிரநீதி, திருக்குறள் இரண்டையும் ஒப்பீட்டு முறையிலும் மணிமேகலையில் உலகாயதத் தத்துவம், காலம், சமுதாய வெளிப்பாடுகள் எவ்விதம் கூறப்பட்டுள்ளன என்பதையும் இவ்வாறு மொத்தம் பன்னிரண்டு கட்டுரைகளும் விரிவான முழுமையான ஆய்வு முடிவுகளை முன்வைத்துள்ளன. நன்றி: தினமணி, 15/9/2014.