செவ்வி

செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், சந்தியா பதிப்பகம்,புதிய எண்-77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக்கம் 104, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-561-3.html

தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவை, அடித்தட்டு மக்களின் நோக்கில் ஆய்வு செய்துவருபவர் பேராசிரியர் தொ. பரமசிவன். மிகக் கறாராக நூல் பிடித்து வரலாற்றை அணுகாமல் நெகிழ்ச்சிப் போக்கோடு பன்மைத்தன்மையைப் பேணுவது தொ. பரமசிவத்தின் சிறப்பு. அதனாலேயே தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் என அனைவராலும் கொண்டாடப்படுபவராக இருக்கிறார் தொ.ப. செவ்வி என்ற இந்த நூலில் அவருடைய ஏழு நேர்காணல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். பண்பாடு, வரலாறு, மதம், சிறுதெய்வ மரபு… என நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களைச் சுமந்திருக்கிறது இந்த நூல். தன்னுடைய வளர்ப்பு தொடர்பான கேள்விக்கு, சமய நல்லிணக்கம் என்பது பெரியாரைப் படித்து எனக்கு வரவில்லை. அது இயல்பாகவே என் வீட்டில் இருந்தது. இந்த ஊரில் கூட இதைப் பார்க்கலாம். சவேரியார் கோயில் திருநாளில் மற்ற மதத்துக்காரர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கிறிஸ்துமஸூக்கு, பாலகன் பிறப்புனு இருக்கும். பிறந்த குழந்தையைப் பார்க்க சோப்பு, பால், பவுடர் டின் எல்லாம் வாங்கிட்டு எல்லா சாதி, மத மக்களும் போவாங்க. இந்தச் சமய நல்லிணக்கம், பெண்களிடம்தான் இயல்பா இருக்கு. நம்மில் சரிபாதியாக பெண்கள் இருக்கிறதாலதான் இங்க மதக் கலவரங்கள் இல்லை என்று தமிழகத்தின் தென்பகுதி மக்களிடம் நிலவும் எல்லை கடந்த பண்பாட்டு நினைவுகளைச் சொல்கிறார். 13ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்திய பண்பாட்டுப் படையெடுப்புகள் தொடர்பாகப் பேசும்போது விஜயநகர ஆட்சியில் பிராமணர்கள் தொடங்கி ஒடுக்கப்பட்டவர்கள் வரை தெலுங்கு மக்கள் தமிழகத்தில் குடியேறினார்கள். அவர்களுடைய வருகைக்குப் பிறகுதான் நிறைய விஷயங்கள் புராண அடிப்படையிலும், ஆகம அடிப்படையிலும் மாற்றப்பட்டன. அதற்கு முன்பு காரடையான் நோன்பும் வரலட்சுமி நோன்பும் இங்கே கிடையாது. தீபாவளிகூடச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதில்லை. விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் இவர்களின் வருகைக்குப் பின்னர், தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதகம்தான் அதிகம். சாதகமான அம்சம் என்று பார்த்தால், அங்கிருந்து வந்த உழைக்கும் மக்கள் வேளாண்மைக்கும் நெசவுக்கும் செய்த தொண்டுகள் அதிகம். குறிப்பாக, சௌராஷ்டிரர்களின் பங்கு கணிசமானது என்கிறார். கருணாநிதி ஆட்சியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்காதது  தொடர்பான கேள்வியொன்றுக்கு இப்படிப் பதில் சொல்கிறார். ஏனெனில் தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனால் அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். கலைஞர் அழைத்ததினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன். நாட்டார், தெய்வங்கள், மறைக்கப்பட்ட மக்கள், பண்பாடு, மன்னர்கள் பற்றிய மதிப்பீடுகள், பெரியாரை கிராம தெய்வ நோக்கில் அணுகல்… எனக் காய்த்தல் உவத்தல் இன்றி வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் தொ.ப-வோடு பயணிக்கலாம். நன்றி: விகடன், 18/9/2013

Leave a Reply

Your email address will not be published.