ஜீவா பார்வையில் பாரதி
ஜீவா பார்வையில் பாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
தமிழக அரசியல்வாதிகளில் தனித்துவமிக்கவர் ஜீவா. இவர் மிகச் சிறந்த பேச்சாளர். இலக்கியவாதி. தொடக்கத்தில் காந்தீய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் சுயமரியாதை கருத்துக்களை ஏற்று, இறுதியில் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். அவர் பேச்சில் தொடாத துறைகளே இல்லை. இடம் பெறாத தலைவர்களே இல்லை. காந்தியடிகள், வ.உ.சி., பரலி சு.நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற ஜீவா, பாரதியாருடன் பழகியதில்லை. இருந்தபோதிலும் பாரதியின் படைப்புகளை படித்து, தமிழ் மக்களிடம் பாரதியைக் கொண்டு செல்லும் பணியில் முழுச்சுடன் ஈடுபட்டவர் ஜீவா. மகாகவி பாரதியார் பற்றி ஜீவா பேசிய சொற்பொழிவுகளைக் கவிஞர் கே. ஜீவபாரதி தொகுத்து வழங்கியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பாரதியைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் ஜீவாவின் பங்கு மகத்தானது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். (விலை 200ரூ.) ஜீவபாரதி எழுதிய ஜீவா பார்வையில் கலை இலக்கியம் (ரூ. 150), ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் (விலை ரூ.150) ஆகிய நூல்களையும் நீவா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/7/2014.
—-
காஞ்சி மகாத்மா வாழ்வும் வாக்கும், வேம்பத்தூர் கிருஷ்ணன், சுடர்மணிப் பதிப்பகம், சென்னை, பக். 112, விலை 50ரூ.
நம் கண் முன்னே வாழும் தெய்வமாக மாமுனிவராக அருள்புரிந்து நம்மிடையே வாழ்ந்தவர் வாழ்ந்து கொண்டிருப்பவர் காஞ்சி மகா பெரியவர். இவரைப் பற்றி எத்தனை எத்தனையோ நூல்கள் வந்தாலும் அவற்றில் ஏதாவது புதிய புதிய தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வரிசையில் இந்நூலாசிரியர் தொகுத்திருக்கும் சில அற்புதமானப் பதிவுகள் அரிய பதிவுகள் என்றே கூறலாம். காஞ்சி ஸ்ரீபரமாச்சாரிய மஹா சுவாமிகள் அன்று (1894) முதல், நேற்று (1993) வரையில் உள்ள பதிவுகள் ஒவ்வொன்றிலும் அவரது தெய்வீக வாழ்வில் நடந்த சம்பவங்களை அந்தந்த ஆண்டுகளோடு குறிப்பிட்டுக் கோவையாக்கிச் சொல்லியிருப்பது சிறப்பு. பெரியவா பேசறா என்ற தலைப்பில் உள்ள ஔவையார் பற்றிய பதிவு அருமை. காஞ்சி மகாத்மா நூற்றெட்டுப் போற்றி மனனம் செய்வதற்காகவே இணைக்கப்பட்டுள்ளது. சுகன்யை, சீதை, அருந்ததி, சபரி, காந்தாரி, கண்ணகி, வாசுகி, போதேந்ராள், சாவித்திரி, வால்மீகி, நளாயினி, ஜெயதேவர், மண்டோதரி முதலியோரின் வாழ்க்கை சம்பவங்களை வர்ணிக்கும் விதமான எளிய புகைப்படங்களை ஓவியமாகத் தீட்டி இணைத்திருப்பது நூலுக்கு மெருகூட்டியுள்ளது. நன்றி: தினமணி, 14/7/2014.