ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்
ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பு மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை.
ஜெயகாந்தன் என்ற ஆளுமை உருவான பின்னணி, வாழ்கைப் போராட்டத்தில் எழுதுகோலை அவர் ஆயுதமாக தேர்ந்தெடுத்த அனுபவம், தமிழ் இலக்கியத்தின் போக்கை மாற்றியமைத்த அவரது எழுத்தின் துணிவு, சமூகத்தின் மீதான அவரது அக்கறை, கோபம், அவர் எழுப்பிய குரல், மண் வாசனையைத் தாண்டி மனித நெடியை வீசச் செய்த அவரது கதைகள் பற்றிய பார்வை, சினிமா சார்ந்த அவரது விமர்சனங்கள் சினிமா உலகில் எத்தகைய அழுத்தத்தை ஏற்படுத்தியது, மாற்று சினிமாவுக்கான அவரது முயற்சி, அரசியலில் அவரது வெளிப்படையான தயக்கமற்ற போக்கு, பல்வேறு தளங்களில் இயங்கிய ஜெயகாந்தன் என்ற மனிதரைப்பற்றிய ஒரு பார்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் வழி ஜெயகாந்தன் ஆளுமை வெளிப்படும் விதம் என்று ஜெயகாந்தனைப் பற்றி முடிந்த அளவு பதிவு செய்திரு;fகிறார் தொகுப்பாசிரியர் மணா. ஜெயகாந்தனின் நினைத்துப் பார்க்கிறேன் கட்டுரை அவரே சொன்னதுபோல் படிப்போரை அல்லற்படுத்துகிற, ஜெயகாந்தனின் பேச்சில் இருந்த கர்ஜனைக் காலத்தை இப்பதிவு நினைவுபடுத்துகிறது. குமுதம், தீராநதி, உயிர்மை, காலச்சுவடு உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வெளிவந்த பலரின் பார்வை – எந்த ஒரு தனிமனித துதியும் அற்ற தொகுப்பாக அமைய- மணா எடுத்துக்கொண்ட உழைப்பு வெளிப்படை. மொத்தத்தில் ஜெயகாந்தனைப் புரியாதவர்களுக்கும் புரிய வைக்கும் தொகுப்பு. நன்றி: குமுதம், 17/8/2015.