தகராறு
தகராறு, கடந்து சென்றிடம் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும், யொ. ஹான்கால்டுங், தமிழில்-சுப.உதயகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 168, விலை 85ரூ.
தகராறு என்பது தவறானது அல்ல. மனித வாழ்க்கைக்குத் தகராறு மிகவும் இன்றியமையாதது. கருத்து முரண்பாட்டின் அடுத்த நிலை தகராறு. தகராறு முற்றும்போது தீர்வு ஒன்று உருவாகும். தகராறுகளுக்கு நிவாரணம் என்ன? என்பதைப் பற்றி இந்த நூல் விரிவாக அலசுகிறது. மனிதனுக்குள் மற்றும் மனிதருக்கிடையே எழும் முரண்பாடுகள், சிறுதகராறுகள், சமூகங்களிடையே எழும் பிணக்குகள் குறுந்தகராறுகள், அரசுகளுக்கும் மக்களுக்கும் இடையே எழும் தகராறுகள், பெருந்தகராறுகள், பிராந்தியங்களுக்கும், நாகரிகங்களுக்கும் இடையேயான சண்டைகள் மாபெரும் தகராறுகள் என தகராறுகள் வகைப்படுத்தப்பட்டு, அவை ஒவ்வொன்றையும் உதாரணங்கள் மூலம் ஆசிரியர் விளக்கியுள்ளார். ஒரு தகராறு என்பது மனப்பாங்கு-செயல்பாடு-முரண்பாடு என மூன்றாகப் பிரிக்கப்பட்டு அதைப்பற்றி 11 பக்கங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பிரச்னையின் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பதற்குப் பதிலாக பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்ப்பதற்குப் பழக வேண்டும். இதற்கு டிரான்சென்ட் முறையே பிரதானமானது என்பதை ஆசிரியர் அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகிறார். தகராறு, தீர்வுகளுக்குத் திருக்குறளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவருடன் நூலாசிரியர் சுப. உதயகுமாரன் உரையாடுகிறார். கேள்வி பதில் உரையாடலில் 60 குறள்கள் பொருத்தமாக இடம் பெறச் செய்திருப்பது நூலாசிரியரின் நுட்பத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. நன்றி: தினமணி, 6/1/2014.
—–
தத்துவவிவேசினி – சென்னை இலௌசிக சங்கம், வீ. அரசு பதிப்பு.
அறியப்படாத தமிழகத்தின் மிக முக்கியமான வரலாற்றை அகழ்ந்த ஆவணமாக்கி இருக்கிறார் பேராசிரியர் வீ. அரசு. 1878ல் உருவான இந்து சுயக்கியானிகள் சங்கம்தான் தமிழகத்தின் முதல் பகுத்தறிவுச் சங்கம். பெரியாருக்கு முன்பே இப்படி ஒரு பகுத்தறிவு இயக்க மரபு நம்மிடையே இருந்துள்ளது. முதலில் சுயக்கினியானிகள் என்ற பெயரில் இயங்கிய இவர்கள், பின்னர் தங்கள் அமைப்பை சென்னை இலௌகிக சங்கம் என பெயர் மாற்றிக்கொண்டு தத்துவவிவேசினி, தி திங்கர் ஆகிய தமிழ், ஆங்கில வார இதழ்களை நடத்தியுள்ளனர். சென்னையில் நாத்திகர்கள் உருவாகத் தொடங்கிய மரபு முதல் ஆத்திகர் நாத்திகர் இடையிலான உரசல் விவாதங்கள் வரை தொகுக்கப்பட்டுள்ளன. 1878 முதல் 1888 வரை வெளிவந்த இந்த இதழ்கள் தொடர்பான செய்திகள் அப்படியே வரலாற்றில் இருந்து விடுபட்டுவிட்ட நிலையில், தனது 10 ஆண்டுகாலக் கடும் உழைப்பின் மூலம் அவற்றை ஆவணமாக்கி இருக்கிறார் பேராசிரியர் வீ. அரசு. ஆங்கிலத்தில் இரண்டு, தமிழில் நான்கு என மொத்தம் ஆறு தொகுதிகளாக வெளியாகியுள்ள தத்துவவேசினி இதழ் தொகுப்பு, சுமார் 3500 பக்கங்களைக் கொண்ட அரிய ஆவணம். நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.