ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழ்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழ், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அறக்கட்டளை, சென்னை 4, பக். 146, விலை 25ரூ.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் இந்த இதழ், 2 லட்சம் பிரதிகள் காணும் சிறப்பிதழாகவும், சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் குறித்து பிரபலங்கள் எழுதிய 60 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும் என்று சுவாமிஜி எழுதிய கட்டுரை முத்தாய்ப்பாகத் திகழ்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகிய அரசியல் துறைப் பிரபலங்கள் சுவாமிஜி குறித்து எழுதிய கட்டுரைகளின் வித்யாசமான தொகுப்பு. ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமிஜிகள் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரைகள், மாதா அமிர்தானந்தமயி, சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி ஓம்காரானந்தர் என ஆன்மிகத் துறையின் வெவ்வேறு சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் பார்வையில் சுவாமிஜி குறித்த கட்டுரைகள், கவிஞர் வைரமுத்து, ஸ்டாலின் குணசேகரன், நீதிநாயகம் சந்துரு, சுகிசிவம், தமிழருவி மணியன், இறையன்பு என வெவ்வேறு சிந்தனை கொண்டவர்களின் கட்டுரைகள், மௌலானா வஹிதுதீன் கான் எழுதியுள்ள இஸ்லாமிய அறிஞரின் பார்வையில் விவேகானந்தர் என்ற கட்டுரை ஆகியவை இந்தச் சிறப்பிதழின் நோக்கத்தை உயர்த்திப் பிடிக்கின்றன. சுவாமி விவேகானந்தர், குறுகிய வட்டத்துக்குள் அமர்ந்துவிட்டவரில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரின் பரந்து விரிந்த பார்வையை, உலகத்துக்குப் பொதுவான மனிதராக தெய்வீகத்தை உணர்த்தும் ஆசார்யராக இந்தக் கட்டுரைகள் அவரை வெளிக்காட்டுகின்றன. இந்த இதழ் பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்டு, பார்வையற்றோரும் வாசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அது சுவாமிஜியின் பிறந்த தினமான ஜன.12 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்றும் வெளியிடப்பட்டுள்ள தகவல், வியப்புக்குரிய ஒன்று. ஒரு கால் இன்றி இமயமலை ஏறி சாதித்த அருணிமா சின்ஹா, தாம் நொறுங்கியபோது தம்மை நிமிர்த்தியவராக சுவாமிஜியைக் காட்டுகிறார். ஓரு குடும்பத்தில் சுவாமிஜியின் தாக்கம் எப்படி, அந்தக் குடும்பத்தை சாதிக்கும் குடும்பமாக உயர்த்தியுள்ளது என்ற கட்டுரையைப் படிக்கும்போது நமக்கும் நம்பிக்கை பிறக்கிறது. சுவாமிஜியின் 150ஆவது ஆண்டில் மலர்ந்துள்ள இந்தச் சிறப்புத் தொகுப்பு. அன்பர்களின் மனத்தை உருக்கும் விதமாய் அமைந்து, சிறப்பிதழின் தயாரிப்பில் உள்ள உழைப்பை வெளிக்காட்டுகிறது. நன்றி: தினமணி, 6/1/2014.