துக்காராம்
துக்காராம், பாலசந்திர நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே.நாகு, சாகித்ய அகாடமி, டில்லி, விற்பனை-குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ.
மராத்தி இலக்கிய படைப்பாளர்கள் சமய சீர்திருத்தமும், சமுதாயச் சீர்திருத்தமும் ஏற்பட நூல்கள் பல எழுதினர் என்பர். இந்நூல், துக்காராமின் காலச்சூழல், அவர் வாழ்க்கை வரலாறு, கவிஞர் திருத்தொண்டர் என்ற நிலையில் வாழ்ந்த துக்காராம் என்று பல தலைப்புகளில் விளங்குகிறது. துக்காராமின் மராத்தி பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. படிப்போருக்கு மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. நூலின் இறுதியில் உள்ள அருஞ்சொற்களும், அவற்றின் விளக்கங்களும் எனும் பகுதி, நூல் படிப்போருக்கு மிகவும் உதவும். படிக்கப் பயனுள்ள நூல். -டாக்டர் கலியன் சம்பத்து.
—-
இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும், பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 368, விலை 200ரூ.
வடக்கில் தோன்றும் பகவான் ராமகிருஷ்ணருக்கு இணையாக, தென்னகத்தில் அவதரித்த வள்ளல் ராமலிங்க அடிகளைப் பெரியோர் கூறுவர். இந்நூல் வள்ளலார் குறித்து, நாம் முன்பு அறிந்த செய்திகளை தவிர, பல புதிய செய்திகளை தருவதும், வள்ளலாரின் உண்மை வரலாற்றை கூறுவதும், நம்மை வியக்க வைக்கிறது. பகு என்ற சொல்லிற்கு தரும் விளக்கத்தையும் (பக். 117), ஆதி பகவனே அல்லாஹ் என்று கூறுவதும் (பக். 230), நெற்றியில் திருநீறு இடுவதன் உட்பொருளை விளக்குவதும் (பக். 250), நூலாசிரியரின் நுட்பமான ஆய்வுத் திறனுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். வள்ளலாரின் வாழ்க்கையை, 48 தலைப்புகளில் கூறியுள்ளார். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 5/1/14.