தடித்த கண்ணாடி போட்ட பூனை

தடித்த கண்ணாடி போட்ட பூனை, போகன் சங்கர், உயிர்மை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ.

அவர்களை மன்னியும் அவர்கள் தாம் செய்வது (எழுதுவது) இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். அவர்களை மன்னியும்! சிறுவயதுதொட்டு அவரை நான் பார்த்திருக்கிறேன். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். அவரிடம் ஒரு சைக்கிள் உண்டு. அந்த சைக்கிளை அவர் ஒட்டி நான் பார்த்ததே கிடையாது. ஏனெனில் அவருக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. வாழ்நாள் முழுக்க அவர் அந்த சைக்கிளை உருட்டிக் கொண்டே திரிந்தார். மற்றவர் ஓட்டினால், பின்னால் உட்கார்ந்திருப்பார். போதையான நாட்களில் சைக்கிள் அவரை உருட்டிக்கொண்டு போகும். ஒர் இரும்பு நிழலாக, அந்த சைக்கிள் அவரோடேயே திரிந்தது. யாராவது சில சமயம் கேட்பதுண்டு. “அந்த சனியனைத்தான் நீ ஓட்றதில்லையே. அப்புறம் ஏன் அதையே இழுத்துக்கிட்டு திரியிறே” அந்தக் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லமாட்டார். வெறித்துப் பார்ப்பார். பழையபடி உருட்டிக்கொண்டு புறப்படுவார். தமிழ்க் கவிதை நிலத்திலும் நாம் இப்படியான சைக்கிளை உருட்டிக்கொண்டு மாத்திரமே திரிபவர்களைப் பார்க்கிறோம். அந்த வெறித்த பார்வைகளையும் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். உருளும் சைக்கிள்களின் சத்தங்கள் நம் நிலமெங்கும் எதிரொலிக்கின்றன. ரகசியமாக எல்லோரும் தாங்கள் கவிதை எழுதியதாக/எழுதுவதாக சொல்கிறார்கள். பெருந்திரளை இந்த வடிவத்திலிருக்கும் ‘குறைவான உழைப்பு’ வசீகரிக்கிறது. ஒன்றன் கீழ் ஒன்றை கவிதை என நம்புகிறது. நாம் பேசும் அதே மொழிதானே அதிலென்ன மர்மம் என அகங்காரமாய் கேட்கவும் செய்கிறது. கவிதை என்பது மாநகரப் பேருந்தல்ல. எவர் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ள என்று யார் சொல்வது இவர்களிடம். கவிதை என்பது மொழிக்குள் இயங்கும் மொழி. முன்பு சீனத்தில் பெண்கள் மாத்திரம் பேசிக்கொண்ட பிரத்யேக மொழி அது. இந்த மொழியை புரிந்துகொள்ள பேதைமை வேண்டும். இப்படியான ஒரு சூழலில் போகன் சங்கர் தமிழ்க் கவிதைக்குள் வருகிறார். பல பைத்தியக்காரத்தனங்களோடு வருகிறார். சிறுபத்திரிகையில் எழுதவேமாட்டேன் என்கிறார். ஒரு வருடத்தில் இரண்டு தொகுப்புகளைக் கொண்டு வருகிறார். பகடி செய்கிறார். நாம் பதிலுக்கு புன்னகைக்கவும் செய்கிறோம். இதில் பிரச்சனை என்னவெனில், போகன் புரியும்படி எழுதுகிறார். அசலான கவிதைகளை வேறு எழுதிவிடுகிறார். அலைந்து திரிகின்றன இவரது கவிதைகள். காமம், பெண்ணுடம்பு, நோய்மை, பயம், தற்கொலை, அழகியல் என எல்லா பரப்பிலும் கந்தலாடைகளோடு உலா வருகின்றன இக்கவிதைகள். காண்பவற்றை எல்லாம் சொற்களின் வழி தொடுவதன் மூலம் போகனால் எல்லாவற்றையும் கவிதையாக்க முடிகிறது. அவ்வகையில் போகன் ஒரு மைதாஸே. தமிழ்நாடும் கேரளமும் சந்திக்கும் (அல்லது முரண்படும்) கழிமுகமான மார்த்தாண்டத்தில் வாழ்வது போகனுக்கு ஆதிச்சொற்கள் பலவற்றை வழங்குகிறது. அம்மாச்சியின் வெண்கலக் கும்பாக்களை துலக்கத் துலக்க அழகாவதைப் போன்ற சொற்கள். தமிழ்க்கவிதையில் அரிய வரவு போகன் சங்கர். போகனின் கவிதைகள் அப்பட்டமானவை. பாசாங்கற்றவை. காமம், தற்கொலை மற்றும் பாலியல் தொழிலாளி பற்றி சமகாலத்தில் தமிழில் கவிதை எழுதாதவர் யார்? ஆனால் அது போகன் எழுதும்போது வேறொன்றாக ஆகிவிடுகிறது. தொகுப்பு நெடுக, பெண்கள் கல்லத்தி முடுக்கிலும் விடுதியிலும் திருவனந்தபுரம் சாலையிலும் கடைத்தெருவிலும் திரிகிறார்கள். தமிழில் ஒரு கவிதைத் தொகுப்பில் இவ்வளவு பெண்கள் தென்படுவது மிக அபூர்வம். ஆன்டனி பெர்கின்ஸின் தி சைக்கோ திரைப்படத்தில் படம் முழுக்க அம்மாவின் சவத்தோடு மாத்திரமே உரையாடிக்கொண்டிருக்கிற நாயகனைப்போல இங்கே கற்பனையாக ஒரு பெண்ணை உருவாக்கி உரையாடுவது நவீன தமிழ் கவிதையின் சாபம். போகனின் கவிதைகளில் விதவிதமான பெண்கள் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்ற ஜெயகாந்தனின் நாவல் தலைப்பை ஸ்ரீராமஜெயம் போல “ஒரு மனிதன் ஒரு பொய்த் துயரம் ஒரு மாயப்பெண்” என்று கவிதைகள் எழுதப்படும் இக்காலத்தில் இத்தொகுப்பு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது. வாசிக்கும்போது பல சமயங்களில் இந்தக் கவிதை நம்மைப் பற்றித் தானே என்று தோன்றுகிறது. ஒரு படைப்பாளி வாசிப்பவனின் ஆன்மாவைத் தொடும் தருணம் அது. போகன் பால்யத்தில் நின்றது திருநெல்வேலி தாமிரபரணியில். இப்பொழுது நிற்பது குழித்துறை தாமிரபரணியில். முதலாவது காயல்பட்டினத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இரண்டாவது தேங்காய்ப் பட்டினத்தில் அரபிக்கடலில். இவர் இரண்டாவது தாமிரபரணியின் ஆற்றங்கரையோரத்திலே நிற்கட்டும் என இன்ஷா அல்லாவை பிரார்த்திக்கிறேன். சாம்ராஜ். நன்றி: இந்தியா டுடே, 25/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *