பயணம்
பயணம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 392, விலை 350ரூ.
இளைஞனும் ஆசாபாசங்களும் தமிழ் புனைகதையில் இதுவரை இல்லாத பல புதிய பரிமாணங்களை முன்வைக்கும் நாவல். செல்வம், செல்வாக்கு முதலியன இலக்காகக் கொள்ளாமல் யோகாசனம், சமூக சேவை ஆகியவற்றை நாடிப் பெற்றோரிடம்கூடக் கூறாமல் ஓர் ஆசிரமத்தில் சேரும் இளைஞனின் கதை. ஏற்கனவே பல யோகாசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆசிரமத்தின் கிளைகள் எனக் கூறப்படுபவைக்கு அனுப்பப்படுகிறான். ஒரு சமூகக் கிளர்ச்சியில் ஒரு கட்டத்தில் காவல் துறையும் துணை வராது என்ற நிலை ஊடகங்கள் மூலம் தலைகீழாகி நல்லவர் பாதுகாப்பு பெறுகிறார். அந்த நல்லவர் மூலம் ஒரு பெண் பரிச்சயமாகி அந்த இளைஞன் உள்ளத்தில் இடம் பெறுகிறாள். அவள் இளம் விதவை. பள்ளிக்குச் செல்லும் வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆசிரமத் தலைவர் நோயுற, இளைஞனின் நிலைமை சிக்கலாகிவிடுகிறது. ஆனால் ஆசிரமத்தை விட்டுவிட்டு வேறு நல்லெண்ணம் கொண்டவர்களின் பாதிப்பால் காசி அடைகிறான். அங்கே புதிய வழிகாட்டிகள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் அவனுக்குச் சம்மதமிருப்பினும் மசூதி இடிக்கப்பட்ட விதம், அந்தக் கூட்டத்தின் வெறித்தனமான போக்கு அவனை மிகவும் மனம் வருந்த வைக்கிறது. தெற்கே இவன் ஆசிரமத்தின் பணத்தைக் கையாண்டுவிட்டான் என்று மூத்த சாமியாரின் மறைவுக்குப் பின் தலைவராகும் இளைய சாமியார் குற்றம் கண்டு காவல் துறையில் புகார் செய்யவும் திட்டமிடுகிறார். சில நல்லவர்கள் தலையீட்டால் இது தவிர்க்கப்படுகிறது. இளைஞன் நீண்ட காலம் காசியில் இருக்கிறான். அவனுக்குத் தொடர்பு அப்பெண் மட்டும்தான். கதை, இளைஞன் இரண்டுமே நழுவிப் போகக்கூடியவை. இளைஞன் துறவியாக விரும்பவில்லை. ஆனால் துறவு வாழ்க்கையே அவன் மனதில் பதிகிறது. பெண்ணாசை அவன் சந்தித்த விதவைப் பெண் மூலம் தொடர்ந்து இருந்து வருகிறது. இத்தகைய சிக்கல் உள்ள இளைஞர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அவர்களைப் போலிகள் அல்லது பொறுப்பறியும் பக்குவமற்றவர்கள் என்றும் ஒதுக்கிவிட முடியாது. திடீரென்று ஒரு துறையில் முனைந்து அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும். இந்த நூலில் இளைஞன் தன் ஆசா பாசங்களை வென்று அவனே ஓர் ஆசிரமத்தை நிறுவுகிறான். நாவலில் கதாநாயகன் விதவை சந்திப்புகள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் விவரிக்கப்படுகின்றன. மாதக் கணக்கில் – வருடக்கணக்காகவும் இருக்ககூடும் – பெண் நினைவே இல்லாமல் அவனால் இருக்க முடியும். இறுதியில் அவளே அவன் ஆசிரம நிறுவனத்தில் முக்கிய பங்காற்றுகிறாள். கள்ளச் சாராயக்காரர்களுடன் மோதல் ஏற்பட்டு அது நல்ல தீர்வு அடைவது நாவலின் ஒரு நல்ல கட்டம். அதே போலக் காசி அனுபவங்களும் சிறப்பு. முற்றிலும் புதிய களம், புதிய கதாநாயகன் இரண்டும் தமிழ்ப் புனைகதையில் இதுவரை இவ்வளவு விரிவாக வரையப்பட்டதில்லை. இதை ஆன்மிகப் புனைகதை என்றும் கூறிவிடமுடியாது. பல சமீப கால வரலாற்று நிகழ்ச்சிகள் நூலில் வருகின்றன. யோகஸ் சித்த விருத்தி நிரோத: என்ற வரி பதஞ்சலி யோக சூத்திரங்களில் இரண்டாவது வரி. யோகம் என்பது சித்தம் வளர்வதைத் தடுப்பது. சித்தம் என்றால் என்ன? மனம், புத்தி போன்ற சொற்களைப் பொருள் கூறிவிடலாம். சித்தம் சற்றுக் கடினமானது. நாம் எதையும் அடக்கக்கூடாது. எதை அடக்குகிறோமோ அது பீறிக் கொண்டு கிளம்பும். இதை சுவாரசியமான நாவல் என்று கூறமுடியாவிட்டாலும் இது தமிழுக்குப் பல புதிய பரிமாணங்களை முன் வைக்கிறது. ஆன்மிகப் பணி எனத் தொடங்கி, அது நிறுவன வடிவம் பெற்றுவிட்டால் அதில் சுயலாபம், பிறரைப் பழித்தல் முதலிய கிருமிகள் பரவத் தொடங்கும். பயம் நாவலின் நாயகன் அவற்றுக்கு இடம் கொடுக்கமாட்டான். அவன் அனுபவம் அவற்றைத் தடுத்துவிடும். -அசோகமித்திரன். நன்றி: இந்தியா டுடே, 25/2/2015.