நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா
நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023988.html நடிகர்களை விரும்பும் ரசிகர்கள் உண்டு. அதாவது விசிறிகளைச் சொல்கிறேன். ஆனால் நடிகரை விரும்பும் நடிகர் இருப்பது, அதாவது நடிகருக்கே ஒரு நடிகர் விசிறியாக இருப்பது ஆச்சர்யமானது. பாலையாவின் நடிப்பில் மயங்காத நடிகர்களே கிடையாது என்று சொன்னவர் சாதாரணமானவர் அல்ல. நாடகச் செம்மல் என்று புகழப்பட்ட அவ்வை டி.கே. சண்முகம். எவ்வளவு பெரிய நடிப்பு ஜாம்பவான்களுடன் நடித்தாலும் டி.எஸ். பாலையா பளிச் எனத் தெரிவார். 50-களின் இறுதியிலும் 60-களின் தொடக்கத்திலும் பாலையா இல்லாத படம் நல்ல படம் இல்லை என்றே பெயர் வந்துவிட்டது. காதலிக்க நேரமில்லை படத்தில் சினிமா பைத்தியமான மகன் நாகேஷ் கதை சொல்வதை பரிதாபமான அப்பாவாக பாலையா கேட்கும் காட்சியைப் பார்த்துச் சிரிக்காதவர்கள் வாய் இல்லாதவர்களாக மட்டும்தான் இருக்க முடியும். திருவிளையாடல் ஹேமநாத பாகவதரையும், தில்லானா மோகனாம்பாள் தவில் வித்வானையும் ரசிக்காதவர் யார் இருக்க முடியும்? அப்படிப்பட்ட பாலையாதான் அனைவரையும் மிரட்டும் வில்லனாகவும் மிளிர்ந்தார். அந்தக் காலத்தில் வில்லன் நடிப்புக்குப் பெயர் பெற்ற டி.கே. ராமச்சந்திரனிடம் உங்களுக்குப் பிடித்த அபிமான வில்லன் நடிகர் யார்? என்று கேட்டபோது டி.எஸ். பாலையாதான். வேறு யார்? என்று சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட பாலையாவின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார் திருநின்றவூர் தி. சந்தான கிருஷ்ணன். சினிமாவைப் பற்றிச் சேகரிப்பதையே தனது வாழ்க்கைக் கடமையாகக் கொண்டவர் இவர். இவரிடம் 15000க்கும் மேற்பட்ட டி.வி.டி.க்கள் உண்டு. அப்படிப்பட்டவர் பாலையாவின் அனைத்துப் படங்களையும் பார்த்துப் பார்த்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் நின்று கொண்டிருந்த காருக்குள் பாலையா இருப்பதைப் பார்த்து, இளமையில் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கிறார் சந்தானகிருஷ்ணன். அதில் இருந்து புத்தகம் தொடங்குகிறது. கஷ்ட காலத்து நாடக வாழ்க்கை கண்ணீர் வரவைக்கிறது அதன் பிறகு சித்ரா படத்தில் கதாநாயகனாக உயர்ந்துவிட்டார். ஆனால் வில்லன் வேடங்கள் விறுவிறுவென வருகின்றன. இருந்தாலும் வில்லன் வேஷத்துக்காகவே பாலையா பிறந்தான் என்று பெயர் பெற்ற பிறகு வேறு படங்களைப் பற்றி சிந்தனை தேவையில்லை என்று தோன்றுகிறது. திருமணம் தேவலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதுபோல் வில்லன் வேடம் எங்கோ எவராலோ நிச்சயிக்கப்படுகிறது, நம் கையில் இல்லை என்று சொல்லியபடி வில்லனாக பாலையாக கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில்தான், பாலையாவின் தீவிர விசிறி நான். அவர் நடிப்பைப் பார்க்கும் போதெல்லாம் இவருக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரத்தை உருவாக்கி இவரை நம் படத்தில் நடிக்கச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழும் என்று சொல்லி ஸ்ரீதர் காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையாவை நகைச்சுவைத் திலகமாகக் கொண்டு வந்து காட்டினார். நல்ல கலைஞன், எல்லாப் பாத்திரத்துக்கும் பொருத்தமானவனாக இருக்க முடியும் என்பதற்கு பாலையா பெரிய உதாரணம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 21/1/2015.