கடல் கிணறு
கடல் கிணறு (சிறுகதைகள்), ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 79, விலை 60ரூ.
கேள்விகளை எழுப்பும் கதைகள் அடக்குமுறையின் மாமிசத்தைப் பிய்த்துத் துப்பும் கதைகள்: வாசிப்பதோடு விவாதிக்கவும் வேண்டியவை. நிர்ப்பந்தங்களுக்கு அப்பால் வாழ்வை அதன் மங்கலான பிம்பங்களில் இருந்து பதிவு செய்வதாய் எழுதப்பட்டிருக்கும் ஒன்பது கதைகளைக் கொண்டிருக்கும் ரவிக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான கடல் கிணறு இந்தக் காலகட்டத்தில் வாசிப்பதோடு விவாதிக்கப்படவும் வேண்டிய புத்தகம். மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் முக்கியமான ஆக்கங்களைத் தந்துள்ள ரவிக்குமாரின் இந்த கதைகள் பெரும்பாலும் குடும்பத்திற்கு வெளியே இயங்குவதாகத்தான் இருக்கின்றன. கதைகளின் வழியாய் வாழ்வின் புரிந்து கொள்ள முடியாத தருணங்களை கேள்விக்குட்படுத்தும் தர்க்கங்களை உருவாக்குவதோடு மரபாக சொல்லப்பட்ட கதை மொழியிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்வதாகவும் இருக்கின்றன. முழுக்க முழுக்க கதை சொல்லியின் பார்வையிலேயே கதைகள் சொல்லப்பட்டிருப்பதால் உரையாடல்கள் குறைந்து விவரணைகளின் வழியாகவே கதைகள் பயணிக்கின்றன. முதல் கதையான தம்பி தவிர்க்க முடியாத சின்னதொரு துரோகத்தைச் சொல்கின்ற கதையாக இருந்தாலும் அந்த துரோகத்திற்கு ஏமாற்றப்பட்டவனை விடவும் ஏமாற்றியவனின் மேல் கரிசனம் கொள்ள வைக்கும் ஒரு வினோத தன்மை இருக்கிறது. கதையின் துவக்கமும் நிலவியல் சூழலும் ஒரு லத்தீன் அமெரிக்க கதையை வாசிக்கும் மனநிலையை உருவாக்குவதோடு யுவான் ரூல்ஃபோவின் எரியும் சமவெளியை நினைவுபடுத்துகிற ஒரு பயத்தை உள்ளடக்கியதாய் இருக்கிறது. தமிழ்க் கதைகள் நாடோடித் தனங்களுக்கு வெளியிலேயே பெரும்பாலும் இயங்குகிற சூழலில் இந்தக் கதை இரண்டு நாடோடிகளை மையப்படுத்திய கதை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். காலத்தை முன்னும் பின்னுமாக வைத்து மொழியால் விளையாட்டு காட்டும் அகாலம் கதை இருப்பு குறித்தான புதிரான சில நம்பிக்கைகளை உருவாக்கி, பின் மெல்ல அதை கரைத்துவிடுவதாய் இருக்கிறது. இரண்டு கதாபாத்திரங்கள் குறித்த ஒரு தனிமனிதனின் மனவெளிப் பதிவாகவே மொத்த கதையும் நீள்வதில் வாசிக்கும்போதே ஆழமானதொரு தனிமையை நமக்குள் உருவாக்கிவிடுகிறது. திரும்பவே முடியாத கனவு வெளிகளுக்குள் நம்மை இழுத்துக் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்துவிடுவதால் நாமும் காலத்தின் வினோத முடிச்சுகளில் சுழல்கிறவர்களாய் ஆகிவிடுகிறோம். செத்துப் போன சிட்டுக்குருவிகள் ஆகாயத்திலிருந்து மழை பெய்வதுபோல் கொட்டுகின்றன இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த வாக்கியத்தைக் கொண்ட கடல் கிணறு கதை கவனமான வாசிப்பைக் கோரும் கதை. தன்னிடமிருந்து சட்டென விலகிச் செல்லும் தாயின் இருப்பைத் தேடியலையும் ஒருவனின் மனநிலையையும் தற்கொலைக்கு முந்தின கனத்தில் நிகழும் ஆச்சரியகரமான ஒரு சந்திப்பையும் முடிச்சுகளாக்கி நீளும் கதை எந்த நொடியிலும் நம்மை சிதறடிக்கத் தயாராக இருக்கும் கூர்மையோடு எழுதப்பட்டிருக்கிறது. துருவேறிய இரும்பின் பிசிறுகள் கையில் குத்தும்போது ஏற்படும் ஒரு மெல்லிய வலி இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நமக்குள் எழுந்து அடங்குகிறது. துர்சொப்பனங்களை ஆசீர்வாதங்களாய் வலிய பெறும் பாதிக்கப்பட்ட மனிதர்களின் பிரச்சனைகளை பதிவு செய்யும் உண்மை அறியும் குழுக்கள் பெரும்பாலும் சாதிப்பவை எதுவும் இல்லை என்பதை நாவைக் கீறி உப்புத் தூவிய அடர்த்தியுடன் சொல்லும் கதை உண்மை அறிதல். நாம் நமக்கு விருப்பமான உண்மைகளை மட்டுமே கேட்கப் பிரியப்படுகிறோம் என்பது வரலாறு எல்லாக் காலங்களிலும் நமக்கு உணர்த்தியிருக்கும் மகத்தான பாடம். இந்தக் கதை அதை இன்னும் ஆழமாய் நமக்குச் சொல்வதோடு எளிய மனிதர்களின் மீது காட்டப்படும் பாவனையான சமூக அக்கறைகளை முன்னைவிடவும் அதீதமான சந்தேகத்தோடு அணுகக் கற்றுக் கொடுக்கிறது. அதிகாரத்தில் கொல்லப்பட்டவர்களை அவர்களுக்குப் பாத்தியப்பட்டவர்கள் சொல்வது கேட்பவர்களுக்குப் பதிவு: நியாயம் வேண்டி பல காலமாய் காத்திருப்பவர்களுக்கு? எத்தனையோ பேரிடம் எத்தனையோ முறை கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் எந்தவிதமான கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வதாய் இல்லை. அதைத் தொடர்ந்து வரும் எட்டாம் துக்கம் கதையும் அதே மாதிரியானதொரு பிரச்சனையையே பிரதானப்படுததிப் பேசுகிறது. வழக்கொழிந்து போனதாக வெகுஜனம் நம்பிக்கொண்டிருக்கும் ஜாதி இன்னும் கிராமங்களில் காட்டிக்கொண்டிருக்கும் கோர முகத்தைச் சொல்லும்போது வெண்மனி சம்பவம் நமக்கு கடந்தகாலம் மட்டுமேயல்ல என்கிற நிஜம் கசப்பான உண்மையென தொந்தரவு செய்கிறது. ஒரு படி நெல் கூலி அதிகமாய்க் கேட்டதற்காக கொடுமைப்படுத்தப்பட்ட மக்களைப் போல் முதலாளிகளை எதிர்த்துப் பேசியதற்காகவே மொத்த குடும்பத்தையும் வதை செய்யும் கட்டற்ற அதிகாரத்தைக் கொப்பளிக்கும் முதலாளிகள் ஜனநாயகம் குறித்த நமது பொய்யான நம்பிக்கைகளின் மீது தொடர்ந்து காறி உமிழ்ந்தபடியே இருக்கிறார்கள். எல்லாமும் எப்பொழுதும் அதிகாரங்களில் இருப்பவர்களுக்கானதாய் இருப்பதை இந்தியா முழுக்க நிகழும் ஜாதிய வன்முறையும் அதற்கு கிடைக்காத நியாயங்களும் நாம் வாழ்நாள் சாட்சியாய் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். குல்ஃபி உடல் சமயங்களில் உறவுகளின் எல்லா வரையறைகளையும் தாண்டித் திமிறுவதைப் பேசுகின்றன கதை. குல்ஃபி சாப்பிடுவது என்பது எதன் குறியீடு என அந்தக் கதை வாசித்து முடிக்கிறபோது நம் எல்லோருக்குமே தெரிய வந்தாலும் அப்படித் தெரிந்துகொள்ள முடிவதில் சகிக்கவியலாத ஒரு குற்ற உணர்ச்சி நமக்குள் படிகிறது. பார்ப்பனியத்தின் அதிகாரங்களை மறைமுகமாக, ஆனால் வலுவாக பேசும் ழ இந்தத் தொகுப்பின் தனித்துவமிக்க கதை. ழவுக்கு மாற்றாக ஷவை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் விதிக்கும் சட்டம் வெறுமனே கற்பனை என்று நினைக்க முடியவில்லை. சமஸ்கிருதத்தை நமது தேசிய மொழியாக்க வேண்டும என்கிற கோஷம் எதிரொலித்தபடியே இருக்க, கோட்சேவுக்குக் கோவில் கட்டுகிற தீவிரத்துடன் அரசாங்கமே வேலை செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எதுவுமே நடக்க சாத்தியம்தான். வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாய்ச் சொல்லப்படும் இந்தக் கதைகள் இப்பொழுதும் புதிதான ஒரு வாசிப்பனுபவத்தையே தருகின்றன. வாசகனுக்குள் ஏராளமான கேள்விகளை எழுப்புவதோடு அங்கதம் என்பது சிரிக்க மட்டுமே செய்வதல்ல, வலிமையான விமர்சன வடிவம் என்பதையும் புரியவைக்கிறது. -லக்ஷ்மி சரவணக்குமார், நன்றி: இந்தியா டுடே, 25/2/2015.