தத்து அறிந்ததும் அறியாததும்
தத்து அறிந்ததும் அறியாததும், முனைவர் ஷ்யாமா, இலக்கியப்பீடம் வெளியீடு, பக். 144, விலை 100ரூ.
குழந்தையை தத்து எடுப்பது எப்படி? தத்து பற்றி, தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூல் இது. வரவேற்கத்தக்க முயற்சி. ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கு பின்னால், எத்தனை சட்ட விதிமுறைகள் உள்ளன. எந்தெந்த சமூக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும், குழந்தையை தத்து எடுக்க தேவையான மன மாறுதல்கள் என, ஆழமாக அலசிஉள்ளார் ஆசிரியர். இந்தியாவில் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள விரும்புவோர் எண்ணிக்கை அதிமாக உள்ளது. மறுபக்கம் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே, மாபெரும் இடைவெளி உள்ளது என்கிறார் ஆசிரியர். தத்துப் பிள்ளைக்காகவும், காத்திருப்பது சுகமே என துவங்கி, தத்து ஒரு துரித பார்வை என்பது வரை, மொத்தம் 14 கட்டுரைகளாக தொகுத்துள்ளார். இறுதி பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள, கவிதை மற்றும் தமிழகத்தில் உள்ள தத்து மையங்கள் முகவரி வரை, அனைத்தும் தெளிவுற தரப்பட்டிருக்கின்றன. தத்து எடுக்க முடிவெடுத்தலில் உள்ள சமூக சிக்கல்களும், அதை எதிர்கொள்ள தேவையான மனப்பக்குவத்தையும், இந்த நூல் விவரிக்கிறது. மேலும், தத்து எடுத்த குழந்தையிடம், ரகசியத்தை தவிர்ப்பது நல்லது என்பது உள்ளிட்ட பல அறிவுரைகளையும் நல்கி இருக்கிறார். ‘முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி மதத்தினருக்காக தனிப்பட்ட சட்டங்கள், முழுமையாக தத்து எடுத்துக் கொள்வதை அங்கீகரிக்கவில்லை. வேண்டுமானால் பாதுகாவலராக இருக்கலாம்’ என்ற சட்ட பிரிவை குறிப்பிட்டுள்ளார்ஆசிரியர். ‘தத்தெடுத்த குழந்தைகள், தாங்கள் சென்றடைந்த குடும்பங்களுடன் ஒன்றிப்போய் விடுகின்றன’ என தத்தெடுப்போர் மனக் குழப்பத்தையும் தீர்த்து வைக்கிறார். எந்த வயது குழந்தையை தத்தெடுப்பது, யார் யார் தத்தெடுக்கலாம், மருத்துவ ரீதியில் சரியானது, தத்தெடுப்பவரின் வயது வரம்பு என்ன, தேவையான ஆவணங்கள், வழிமுறைகள், சட்ட நடை முறைகள் என, சகலமும் விவரிக்கப்பட்டுள்ளன. ‘கை நிறைய பணம் வருகின்ற வேலையா? கைக் குழந்தையா? என்னும் மனப் போராட்டத்தில் பெரும்பாலும் பணம் ஜெயித்துவிடுகிறது. குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறார்கள். வயது மீறிய திருமணம், காலம் கடந்த கைக் குழந்தை, பல பிரச்னைகளை உருவாக்குகிறது’ (பக். 108). -சுரேஷ். நன்றி: தினமலர், 11/1/2015.