தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம்
தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம், தொகுப்பாசிரியர் சுப்பு, விஜயபாரதம் பதிப்பகம், பக். 501, விலை 200ரூ.
திராவிடக் கட்சிகளை விமர்சிக்கும் ‘திராவிட மாயை – ஒரு பார்வை’ என்ற நூலை எழுதிய இந்நூலின் தொகுப்பாசிரியர், தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர். இவர், சிறப்புமிக்க இலக்கணங்களையும், எண்ணற்ற இலக்கியங்களையும் கொண்ட செம்மொழியாகிய தமிழின் முக்கிய கருத்துக்களைத் திரட்டி இந்நூலில் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் கதாசிரியர்கள், தமிழ் இலக்கியவாதிகள்… என்று 108பேரின் கருத்துக்கள் இந்நூலில் பதிவாகியுள்ளது. சுகி.சிவம் எழுதிய முதல் கட்டுரையை, புத்தகம் படிப்பதால் ஏற்படும் பலாபலன்களை விவரிக்கிறது. அ.ச. ஞானசம்பந்தனின் இரண்டாவது கட்டுரை, கல்கி, திரு.வி.க., பாரதி… போன்றோரின் தமிழ்நடையை விளக்குகிறது. புலவர் இரா. இராமமூர்த்தி எழுதிய கட்டுரை, ஆற்றுப்படை நூல்களைப் பற்றிய விஷயங்களை விளக்குகிறது. முனைவர் அகிலா சங்கரின் கட்டுரை, பௌத்த சமயத்திற்கு முன்பே தமிழகத்திற்கு சமண சமயம் வந்ததையும், அதன் மூலம் தமிழுக்கு இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள், நிகண்டுகள், ஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம் போன்றவை கிடைத்த விபரங்களை விவரிக்கிறது. சைவ மடங்களின் பதிப்புப் பணியைப் பற்றி முனைவர் டி.என். ராமச்சந்திரனின் கட்டுரையும், ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தம் குறித்து பிரேமா நந்தகுமாரின் கட்டுரையும் விளக்குகின்றன. குணங்குடி மஸ்தான் குறித்து கவி.கா.மு.காதர் ஷெரீஃப் கட்டுரை விவரிக்கிறது. இப்படி தமிழறிஞர்கள் 108பேர்களின் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமே தமிழின் சிறப்பை எடுத்துரைப்பது பாராட்டத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக், 09/3/2016.