தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1. அரசமரம்

தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1. அரசமரம், இரா.பஞ்சவர்ணம், தாவர தகவல் மையம், பக். 180, விலை 150ரூ.

தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் எனும் பொதுத்தலைப்பில் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல் என்ற அடிப்படையில், முதலாவதாக அரசமரம் பற்றி தொகுத்தளிக்கப்பட்டுள்ளது இந்த நூல். அரச மரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ஆய்வுக் களஞ்சியமாக வந்திருக்கிறது. அரச மரம் குறித்தான தாவர விளக்கம், தமிழ் பெயர் (அரசு, ஆலம்) ஆங்கில பெயர் (சேக்ரட் பிக்), தாவர பெயர் (பைகஸ் ரிலிஜியோசா), வழக்கத்திலுள்ள இதர தமிழ் பெயர்கள், இதர மாநில மொழிப் பெயர்கள், அரச மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து வகைகள், தொல்காப்பியம், பதினெண் கீழ்க்கணக்கு, சங்க இலக்கியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றில் அரச மரம் குறித்து இடம் பெற்றுள்ள பாடல் அடிகள், வாய் மொழி இலக்கியங்கள், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, காதல் பாடல், நாட்டுப்புறப் பாடல், மருத்துவப் பாடல், சித்த வைத்தியத் தமிழ் பாடல்கள் முதலியவை சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அரச மரத்தை தல மரமாகக் கொண்ட, 47 கோவில்கள், அரச மரத்தின் பெயரையே பெயராக கொண்ட, கோவில்கள், அரச மரத்தை பெயராகக் கொண்ட ஊர்கள், தாவரங்கள், தாவரத்தின் பெயரால் அழைக்கப்படும் மனிதப் பெயர்கள் என, அரச மரம் குறித்தான அனைத்தையும் தமிழில் தொகுத்தளித்ததோடு, அந்த தாவரத்தின் பாகங்களின் படங்கள், சமூக பயன்பாடுகள் குறித்தும் இந்த நூல் முழுமையாக விளக்குகிறது. மொத்தத்தில், அரச மரம் குறித்தான முழுமையான தொகுப்பு இது. தாவர வரிசையை வகைப்படுத்தியும், அறிவியல் தாவர வகைப்பாட்டு அடிப்படையில் பட்டியலிட்டும், ஒழுங்குபடுத்தியும் தந்துள்ள தாவர தகவல் மையம், மிகவும் பாராட்டுதலுக்குரியது. “அறிவியல் ஆராய்ச்சியில், அரச மரம், மனிதருக்கு ஏற்ற சுற்றுப்புறச் சூழலை மாற்றும் சிறந்த மருத்துவக் காரணியாக செயல்படுகிறது. அது அனைத்து வகையான மாசு, குறிப்பாக நீர் மாசு, காற்று மாசு மற்றும் ஒலி மாசிற்குத் தீர்வாக அமைகிறது. மாசுகளினால் ஏற்படும் தீமைகளில் இருந்தும் நம்மை விடுவிக்கின்றது. இது மற்ற மரங்களைப்போல், பகல்நேர ஒளிச்சேர்க்கையில் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுவதில்லை. மாறாக, இரவு நேரங்களிலும், வெளியேற்றுகிறது என நம்பப்படுகிறது.” (பக். 22) -ஸ்ரீநிவாஸ் பிரபு. நன்றி: தினமலர், 21/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *