திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும்
திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும், கலியன் எதிராசன்(எதிராஜுலு), கங்கை புத்தக நிலையம், சென்னை, பக். 278, விலை 100ரூ.
கலியன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட திருமங்கையாழ்வாரின் 30 பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்துக்கு பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் இந்நூலை யாத்திருக்கிறார் கலியன் எதிராசன் என்ற புனைபெயர் கொண்ட எதிராஜுலு. வடிவவில், சைவ நாயன்மார் அப்பரின் தாண்டகங்களை ஒத்த இத்திருநெடுந்தாண்டகம், திருமங்கையாழ்வாரின் கடைசிப் படைப்பு மட்டுமல்ல, நாலாயிர திவ்யப்பிரபந்தத்தின் கடைசிப் பிரபந்தம் என்பதையும் வைணவ ஆசார்யார் பராசர பட்டரால் சாத்திரம் என்று போற்றப்பட்டது என்பதையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். வேதம் என்பது செந்தமிழுக்க வேறுபட்டதல்ல என்பதை, வேதத்தின் உட்பொருளாம் இறையுணர்வை, தமிழ் இலக்கண மரபுப்படி தன்கூற்று, தாய்க்கூற்று, தலைவிக்கூற்று என மூன்று பதிகங்கள் வாயிலாக திருமங்கையாழ்வார் எடுத்தியம்பியிருப்பதை நூலாசிரியர் நன்கு சுவைத்து, விவரித்து விண்டுரைத்திருக்கிறார். தத்தவச் சுவைக்குச் சான்று 2ஆவது பாசுரம். ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமா கடலுருவம் ஒத்துநின்ற மூவுருவாய் கண்டபோது ஒன்றாம் சோதி என்ற பாசுர வரிகள், பொன்னுருவான (ஹிரண்ய கர்ப்பனான) பிரும்மா, செந்தீ போனற செந்நிறம் கொண்ட சிவபெருமான், கடல்போன்ற நீலநிறம் கொண்ட நாராயணன் ஆகிய மூன்று உருவாய் தோன்றுவது அடிப்படையில் ஒரே உருவான பரஞ்சோதியே என்பதை விளக்குகின்றன. அதேபோல் முதல் 10 பாடல்களும், ஓம் என்பதையும், இரண்டாம் 10 பாடல்கள் நாராயண என்பதையும் விளக்குவதாக இந்நூலிலே நிறுவியிருக்கிறார். வைணவர்கள் மட்டுமின்றி, தமிழ்ச் சுவையும், தத்துவச் சுவையும் விரும்புவோரும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 17/11/2014.