திருமுறைகள் வழங்கும் வாழ்வியல்
திருமுறைகள் வழங்கும் வாழ்வியல், ந.ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 416, விலை 310ரூ.
திருமுறைகளில் காணப்பெறும் ஞானத்தேனடையான கருத்துக்களை, 36 தலைப்புகளில் நூலாசிரியர் அழகுறத் தொகுத்து அளித்திருக்கிறார். கடமைகளை ஆற்றும் செயல், கடவுளைப் போற்றும் செயலாக உயர்ந்துவிடுகிறது என்ற கருத்தைக் கருமயோகத்தோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார் கட்டுரையாசிரியர். மனிதப்பிறப்பில் வந்து போகும் நல்வினை, தீவினை பற்றிச் சிந்திக்கும் ஆசிரியர், இறை ஞானமே பிறவிப்பிணிக்கு மருந்தாகி பிறவித் துயரத்தை அகற்றும் என்று கருத்துரைக்கிறார். சிற்றின்பமும், பேரின்பமும் என்ற கட்டுரையில், இறையுணர்வு இன்பம் எப்படிப் பேரின்பமாக, அழியா இன்பமாக இருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறார். இறைவன் அருவும், உருவும் அற்றவனாயும், அருவுரு உற்றவனாகவும் இருப்பதை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார். இறைவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்ற காரணத்தாலே அவன் ஒப்பிலி என்று அழைக்கப்படுகிறான். அவனன்றி ஓரளவும் அசையாது என்ற கட்டுரையில் எடுத்துக் காட்டியிருக்கும் கதையும், எச். ஜி. வெல்ஸ் கூறியுள்ள கருத்தும் நம்மைச் சிந்திக்க வைப்பன. -இராம. குருநாதன். நன்றி: தினமலர், 2/6/2015.