திருவாசகம்
திருவாசகம், இந்துமதி பதிப்பகம், சிதம்பரம், விலை 300ரூ.
திருமுறைகளில் எட்டாம் திருமுறை திருவாசகம் ஆகும். திருவாசகத்திற்கு உருகார் வேறு ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முன்னோர் கூற்று. திருவாசகத்திற்கு இதற்கு முன்னர் பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்த போதிலும் பேராசிரியர் அ. ஜம்புலிங்கம் சீர்களைப் பிரித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உரை எழுதியுள்ளார். மேலும் மாணிக்கவாசகர் வரலாறு, திருவாசகத் தனிச் சிறப்பு போன்ற பல பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த உரை நூலில், மாணிக்கவாசகரின் பாடல் நயங்கள், சைவ சித்தாந்தக் கருத்துகள், வழிபாட்டு முறைகள், பக்தி சிறப்புகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.
—-
குற்றப் பரம்பரை, வேல ராமமூர்த்தி, டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, விலை 400ரூ.
உரிமைகள் மறுக்கப்பட்டு, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு, அதே சமயம் பிரமிக்கத்தக்க வீரத்துடன் வாழந்த ஒரு பரம்பரை பற்றிய உண்மை வரலாற்று அடிப்படையில் எழுந்துள்ள இந்த நாவலில் கையாளப்பட்டுள்ள வசனங்கள் நம்மை அந்த கதைக் களத்துக்கே கொண்டு போய்விடுகிறது. கன்னக்கோல் திருட்டு, துணிகர கொள்ளை, போலீசுடன் வீராவேச மோதல், நளினமான காதல், வைரப் புதையலைத் தேடும் மர்மம், காட்டிக் கொடுக்கும் வஞ்சகம் என அனைத்துக் காட்சிகளும் விறுவிறுப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. தென் மாவட்டங்களில் இப்போது மோதிக்கொள்ளும் இரு சாதி மக்கள் கடந்த காலத்தில் எவ்வளவு ஒற்றுமையோடு இருந்தார்கள் என்பதை இந்த நாவல் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறது. கனத்த இதயத்துடன் முடியும் நாவலின் இறுதி நிகழ்வுகள் மறக்க முடியாதவை. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.