தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசிவாரியர், தமிழில் இரா. முருகவேள், நியூ ஸ்கீம் ரோடு, பக். 272, விலை 220ரூ.
தூக்கு தண்டனைகளை நிறைவேற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்த ஒருவரின் அனுபவப் பதிவுகள் தூக்கிலிடுபவரின் குறிப்புகள் என்ற பெயரில் நூலாக வந்திருக்கிறது. ஜனார்த்தனன் பிள்ளை என்பவர் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகத் தூக்கிலிடுபவராகப் பணியாற்றியிருக்கிறார். முதலில் திருவிதாங்கூர் மன்னராட்சியிலும் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் மொத்தம் 117 மனிதர்களைத் தூக்கிலிட்டிருக்கிறார் இவர் நாகர்கோவிலில் வாழ்ந்த தமிழர். திருவிதாங்கூரில் பெண்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பது போன்ற ஆச்சரியமளிக்கும் செய்திகளும் இந்நூலில் ஆங்காங்கே இருக்கின்றன. தண்டனை விதிக்கப்பட்டவர் முழுவதுமாக இறப்பதற்கு கழுத்தைச் சுற்றியுள்ள சுருக்கோடு எவ்வளவு உயரத்திலிருந்து விழவேண்டும் என்பதற்கு கணக்கு இருக்கிறதாம். சுரக்கின் உயரம், கயிறு செலுத்தப்பட்டிருக்கும் உத்திரத்தின் உயரம் மற்றம் வீழ்ச்சியின் நீளம் ஆகியவற்றுக்கெல்லாம் துலலியமான கணக்குகள் இருக்கின்றனவாம். தூக்கு தண்டனை நிறைவேற்றத்தில் ஒரு முக்கிய கேள்வி உயிர் அக்கணமே போய்விடுகிறது இல்லையா? என்பதாகும். இந்த கேள்விக்கு நூலில் பல இடங்களில் விடையளிக்க முற்படுகிறார் ஜனார்த்தனன் பிள்ளை. இந்த நூலை எழுதியுள்ள சசி வாரியார் ஒரு பாத்திரமாகவே நூல் முழுவதும் வருவதும், வாசகர்களுக்கும் ஜனார்த்தனன் பிள்ளைக்கும் மத்தியில் குறுக்கீடாக இருப்பதையும் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். நன்றி: தினமணி, 4/8/2014.