தென்னிந்திய ஸெளராஷ்ட்ர சமூக வரலாறு
தென்னிந்திய ஸெளராஷ்ட்ர சமூக வரலாறு – பெரியகுளம் கு.அ.ரெங்கராஜன்; பக்.216; ரூ.200; இராஜா வெளியீடு, 10, (மேல்தளம்) இப்ராஹிம்நகர், காஜாமலை, திருச்சிராப்பள்ளி.
மிகவும் நுட்பமான முறையில் தகவல்களைச் சேகரித்து தென்னிந்திய செளராஷ்ட்ர மக்களது வரலாற்றை மிகவும் எளிமையாகவும், தகவல்களை முழுமையாகவும், சரித்திர, கல்வெட்டு ஆதாரங்களோடும் நூலாசிரியர் விவரித்திருப்பது தனிச்சிறப்பாகும். புராண காலத்திலிருந்து வரலாற்றை விவரிக்கும் நூலாசிரியர், சரித்திர காலத்திற்கான ஆதாரங்களுடன் அதை விளக்கியிருக்கிறார். செளராஷ்ட்ர மக்களது சமூக அமைப்பு, பண்பாடு, இடப்பெயர்வால் அதில் ஏற்பட்ட மாற்றம், தற்போது தென்னிந்தியாவில் அம்மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், ஒவ்வொரு அரசர் காலத்திலும் செளராஷ்ட்ர மக்களது நிலை என அவர்களுடைய வரலாறு கவனமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பது சிறப்பு. தற்போதைய செளராஷ்ட்ர சபையினரின் விவரங்கள், பல்துறைப் பிரமுகர்கள் என பல விவரங்கள் நூலின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளன. இந்த நூல் செளராஷ்ட்ர சமூக மக்களின் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினமணி, 18 -பிப்ரவரி – 2013