தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு
தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 180, விலை 160ரூ.
லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிய சர்ச்சையைத் தவிர்த்தும், தமிழர் நாகரிகம் ஆப்பிரிக்கர், ஆஸ்திரேலியர் உள்ளிட்டோருடன் எப்படியெல்லாம் தொடர்புடையதாக உள்ளது என்பதை, பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் வழிபாடுகள் உள்ளிட்ட சான்றுகளுடன் நூலாசிரியர் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார். திராவிடர்கள் வெளியிலிரந்து வந்தவர்களா? தமிழகத்தின் பூர்வீகக் குடிகளா? என்ற வாதத்தை மையமாக்கி, அறிஞர்களின் அனுமானங்களை வைத்து திராவிடர் தமிழக பூர்வகுடிகளே எனக் கூறும் நூலாசிரியர், அதை இன்னும் அறிவியல்பூர்வமான சான்றுகளுடன் கூறியிருக்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட ஆப்பிரிக்க இனத்தவரின் மரபணு மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியைச் சேர்ந்தவருடைய மரபணுவுடன் ஒத்திருந்ததாக ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். இதுபோன்ற தகவல்களை விரிவாக நூலில் அலசியிருக்கலாம். ஆதித்தநல்லூர் ஆய்வு, கொற்கை ஆய்வு ஆகியவற்றின் ஆய்வுகளின் முடிவுகளைத் தெளிவாக வெளியிட்டிருப்பது ஆசிரியரது கருத்துக்கு வலுசேர்ப்பதாக உள்ளது. ஆனால், ஆயுதங்கள், அணிகலன்களை மட்டுமே வைத்து காலத்தை நிர்ணயிப்பது சரியாக இராது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே கடல் கடந்து சென்று வந்ததை அறிவோம். ஆகவே பண்டமாற்று முறையில் வேறு பகுதிகளிலிருந்து கூட பொருள்கள் தருவிக்கப்பட்டிருக்கலாம். தமிழர்களின் தொன்மையைப் புதிய கோணத்தில் அறிவியல்பூர்வ அணுகுமுறைகளோடு வெளிப்படுத்த இந்நூல் முயற்சித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. நன்றி: தினமணி, 24/11/2014.