நடிப்பு
நடிப்பு, (கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம்), மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், பக். 172, விலை 145ரூ.
நாடகம் பற்றிய கட்டுரைகள், திரைப்பட விமர்சனம், பெரியார், தனிநாயக அடிகளார் பற்றிய கட்டுரைகள் என 10 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பகுத்தறிவுப் பரப்புரையாளர் சொல்லின் செல்வர் பெரியார் என்ற கட்டுரையில் பெரியாரின் மனைவி நாகம்மை மறைந்தபோதும், மணியம்மையை அவர் மணம் முடித்தபோதும் பெரியார் சொன்ன கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு அவரைச் சொல்லின் செல்வர் என நிறுவுகிறது. தனிநாயக அடிகள் ஈழப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் இணைந்து பங்கேற்றதைச் சொல்கிற கட்டுரை நெஞ்சைத் தொடுகிறது. மதுரைக்கும் நாடகத்துக்கும் என்ன தொடர்பு? என்பதை சங்க காலத்தில் தொடங்கி, மதுரையில் நிகழ்த்தப்பட்ட நவீன நாடக முயற்சிகள் வரை நூலாசிரியர் சான்றுகளோடு விளக்கியிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் – சொக்கநாதர் திருமண நிகழ்வுகள் நாடகத்தின் நிகழ்த்திக்காட்டல்போல இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். நடிப்பு என்பது கூடுவிட்டுக் கூடு பாயும் தன்மை கொண்டது. கதாபாத்திரங்களாகவே நடிப்பவர்கள் உண்மையில் மாறிவிடுவார்கள். புலம்பெயர்ந்து வாழ்வதன் வலி பாலாவின் பரதேசி திரைப்படத்தில் பதிவாகியிருக்கிறது என்பன போன்ற கருத்துகளை மிகச்சிறப்பாகச் சொல்லும் கட்டுரைகள் புதிய வெளிச்சத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 17/8/2015.