நாயகன் பாரதி
நாயகன் பாரதி, மலர் மன்னன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 320, விலை-240ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-5.html
கடந்த 1960களிலே இருந்து 2013ம் ஆண்டின் நேற்றைய பொழுதுவரை, தமிழ் இதழ்களில் அடிக்கடி காணப்பட்ட பெயர் மலர்மன்னன். சிறந்த இதழ்களில் எல்லாம் அவரது சிறுகதையோ, கட்டுரையோ, தொடர் நாவல்களோ, விமர்சனங்களோ வந்த வண்ணம் இருக்க வைத்த எழுத்துத் தச்சர். பல்வேறு இதழ்களில், அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல்தான் இந்நூல். ஜாதியில்லை வர்ணமுண்டு என்ற தலைப்பில் துவங்கி சின்னராஜு என்ற தலைப்போடு 26 சிறுகதைகளுடன் நூல் நிறைவடைகிறது. ஒவ்வொரு கதையும் முத்திரக் கதை. குறிப்பாக, பாரதி நேசர்கள் ஒவ்வோர் கையிலும் இருக்க வேண்டிய அற்புதமான நூல். -குமரய்யா.
—-
கபிலர், கா. அரங்கசாமி, சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், 433, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 6000018, பக். 128, விலை 50ரூ.
புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று கபிலரை மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ளதாக புறநானூற்றின் 126வது பாடல் மூலம் தெரிய வருகிறது. திருக்கோவிலூரில் உள்ள கல்வெட்டுப் பாடலும், கபிலர் கல்லும் அதன் மீது அமைந்துள்ள கோவிலும், கபிலர் தம் பெருமை கூறுகின்றன. கபிலரின் வாழ்க்கை வரலாறு முழுமையாக ஆதாரப்பூர்வமானதாக ஒருவராலும் தொகுக்கப்படாத நிலையில், இந்த நூலாசிரியர் பெரு முயற்சி செய்து, நல்ல ஆய்வுக்குப் பின், தகவல்களைத் தொகுத்து, மிகுந்த எச்சரிக்கையுடன் பதிவு செய்துள்ளார். கபிலர், தமிழின் செழுமைக்கு வளம் சேர்த்த சங்க காலத்தில் வாழந்த சமூக சிந்தனையுடன் கூடிய புலவர் என்பதை இந்த நூல் மூலம் தெரிந்து கொள்கிறோம். -ஜனகன். நன்றி: தினமலர், 30/6/13.