நிஜமாகா நிழல்கள்

நிஜமாகா நிழல்கள், கோ. சந்திரசேகரன், தரணிஷ் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ.

நூலாசிரியர் சந்தித்த மனிதர்கள், நண்பர்கள், உறவினர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டும் அவர்தம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கருவாகக் கொண்டும், எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பே இந்நூல். இந்தப் பத்துக்கதைகளும் முத்து முத்தான வெவ்வேறு கதைக் கருக்களைக் கொண்டிருப்பது இனிமையான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும் என்ற சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் நிஜமாகா நிழல்கள். எதிலுமே சுயநலமாக உள்ள மனிதன், வீட்டில் வள்ர்க்கப்படும் மரத்திடமும் எவ்வாறு சுயநலமாக நடந்துகொள்கிறான் என்பதைச் சொல்லும் ஸ்தலவிருட்சம், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பட்டம் மேற்கொள்ளும் மாணவர்கள் தங்களது நெறியார்களால் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கறுப்பு ஆடுகள் தெய்வமாகுமா?, நோயாளிகளைத் தனது தாயைப் போல பாவித்து சிகிச்சையளிக்கும் தாயில்லாப் பிள்ளையான மருத்துவரின் கதையைச் சொல்லும் வலி நிவாரணி, வேலைக்குச் செல்லும் மருமகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் மாமியார் காலச் சுழற்சியில் மருமகளால் எவ்வாறு ஓரம் கட்டப்படுகிறார் என்பதை அழகாகச் சித்திரிக்கும் சுளியன் என வாழ்வின் பல்வேறு பக்கங்களை வாசகர்களின் முன்பு விரித்துக் காட்டும் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு நூல். நன்றி: தினமணி, 29/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *