கம்பரும் வால்மீகியும்
கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024576.html வெளிநாட்டு வாழ் தமிழரான இந்நூலாசிரியர், இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் மீது தனக்குள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை இந்நூலின் மூலம் உணர்த்தியுள்ளார். வடமொழியில் ராமாயணத்தை படைத்த வால்மீகிக்கும், அதை தமிழில் உருவாக்கிய கம்பருக்கும் ஆயிரக்கணக்கான வருட இடைவெளியுண்டு. ஆயினும், இவ்விருவரின் கவித் திறனும், கற்பனைத் திறனும் கற்றோரால் இன்றும் ஒப்பிட்டுப் புகழப்படுகிறது. இந்நூலாசிரியரும் அந்த ஒப்பீட்டு ஆய்வை இந்நூலாசிரியர் சிறப்பாக செய்துள்ளார். முதலாவது கட்டுரையில், பால காண்டத்தில், அகலியை தன் கணவர் கௌதம முனிவரால் சாபம் பெற்றதையும், பிறகு ஸ்ரீ ராமரால் சாப விமோசனம் பெற்றதையும் வால்மீகி தனது காலத்திய மரபுகளை ஒட்டி எப்படி கூறுகிறார், அதையே கம்பர் தனது காலத்தின் மரபுகைள ஒட்டி எப்படிக் கூறுகிறார் என்பதையும் அவ்விருவரின் மூலக் கவிதைகளையும் கூறி, இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கியுள்ளார். அதேபோல், ராமர் குரலில் மாயமான் ஓலமிட்டதைக் கேட்டு, சீதைக்கும் லட்சுமணனுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தைப் பற்றிய வேறுபாடுகளை இரண்டாவது கட்டுரையில் ஒப்பிட்டு விளக்குகிறார். இப்படி நான்கு கட்டுரைகளில், ராமாயணத்தில் வரும் சில சம்பவங்களைக் குறித்து புதிய கோணத்தில் ஆய்வு செய்துள்ளது புதுமையாகவும், சிறப்பாகவும் உள்ளன. அடுத்து மஹாபாரதத்தில் வரும் பல்வேறு சம்பவங்கள் குறித்தும் எழும் சந்தேகங்கள், சர்ச்சைகள் பற்றிய இவரது ஆய்வும் இந்நூலில் தொகுக்கப்பட்டுளள்து சிறப்பாக உள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 1/7/2015.