நெஞ்சில் நிலைத்தவர்கள்
நெஞ்சில் நிலைத்தவர்கள், கு.சின்னப்பபாரதி, யூனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை, பக். 218, விலை 175ரூ.
எழுத்தாளர் கு. சின்னப்பாரதியுடன் பழகிய அவர் மனதைத் தொட்ட-நல்ல மனிதர்கள், தலைவர்கள், கலைஞர்கள், இதழாளர்கள் பற்றிய அவர் எழுதிய 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் இம்.எம்.எஸ். நம்பூதிரி பாத், பி. சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன், கே.ரமணி ஆகியோருடனான தனது, நட்பும் தோழமையுமான நினைவுகளை கு.சி.பா. இந்நூலில் அசைபோட்டிருப்பது, அத்தலைவர்களின் உயர்ந்த பண்புகளை வெளிக்காட்டுவதாக உள்ளது. பத்திரிகை உலகில் தாம் ஏற்ற கொள்கை வழிநின்று நேர்மையும், சத்தியமும் கொண்டு செயல்படும் நல்ல மனிதர் என்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனைப் பற்றி ஒரு கட்டுரையில் கு.சி.பா. குறிப்பிட்டிருக்கிறார். எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், பி. கோவிந்தன் பிள்ளை, கவிஞர் மீரா, சிட்டி, சிகரம் ச. செந்தில்நாதன், ச. தமிழ்ச்செல்வன், காஸ்யபன் என நூலாசிரியர் எல்லாரிடமும் நட்புடனும், உரிமையுடனும் பழகியது நம்மை வியக்க வைக்கிறது. எழுத்தாளர் க. சமுத்திரத்தின் மதுப்பழக்கம், இ.எம்.எஸ். நம்பூதிரி பாத் மறைந்தபோது தந்தையை இழந்துவிட்டதைப் போல கு.சி.பா. மனத்துயரில் ஆழ்ந்தது, தி.க.சி.யும் நூலாசிரியரும் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் அணுவளவும் குறையாத நட்புடனும், தோழமையுடனும் பழகியது, கல்லூரி ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற கவிஞர் மீரா, நூலாசிரியரின் சங்கம் நாவலின் கைப்பிரதியைச் சிறையில் இருந்தபோதே படித்துப் பாராட்டி, அதைத் தன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட முன் வந்தது என பல்வேறு தகவல்கள் சுவையாகக் கூறப்பட்டுள்ளன. தனது கொள்கைகள், நம்பிக்கைகள், கருத்துகளோடு ஒத்துப் போகிறவர்களோடு மட்டுமே பழகும் மனிதர்களிடையே எல்லாரிடமும் இனிமையாகப் பழகும் நூலாசிரியரின் பண்பு வியக்க வைக்கிறது. -நன்றி: தினமணி, 28/4/2014.