கொடை காடு

கொடை காடு, ஏக்நாத், காவ்யா பதிப்பகம், சென்னை.

திருநெல்வேலியைச் சேர்ந்த, எழுத்தாளர் ஏக்நாத்தின், கொடை காடு என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். காவ்யா பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது. நெல்லை அருகில் உள்ள கல் ராக்கி மலைப் பகுதிக்கு, கால்நடைகளை மேய்க்க செல்வது பற்றி, இந்த நாவல் விவரிக்கிறது. மேய்ச்சல் வாழ்க்கையை பற்றி, தமிழில் பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். சீன மொழியிலிருந்துகூட, மேய்ச்சல் வாழ்க்கை நாவல் தமிழுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில், ஏக்நாத்தின் கொடை காடு நாவல் இடம் பெறுகிறது. கால்நடைகள் வீட்டின் ஒரு உறுப்பினராக, தமிழர்களால் பாவிக்கப்படுகின்றன. அவற்றின் மீது, குடும்பத்தார் வைத்திருக்கும் பாசம் அலாதியானது. கால்நடையுடன் நமது தொடர்பும், அதன் மூலம் கிடைக்கும் வாழ்வும் நாவலில் விரிகின்றன. கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும்போது, காடுகளுடன் மனிதனுக்கு உள்ள உறவு, காடுகளிலிருந்து தேன், மூலிகை உள்ளிட்ட பொருட்களை சேமிப்பது போன்றவற்றை, நாவல் யதார்த்தத்துடன் விவரிக்கிறது. அதேபோல், மழை, காடுகளின் அவசியம், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் நாவல் உணர்த்துகிறது. காடுகள் மூலம் மழை கிடைப்பதையும், நம் வாழ்வுக்கு இயற்கை எவ்வளவு முக்கியத்துவம் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, விளைநிலங்களையும், காடுகளையும் அழித்து, ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி வரும் இந்த காலகட்டத்தில், கொடை காடு நாவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அன்றாட வாழ்வுக்கு தேவைப்படும் இயற்கையை அழித்துவிட்டு, நாம் வாழும் வாழ்க்கை, எதை நோக்கி செல்கிறது என்பதை, நாவல் உணர வைக்கிறது. மேய்ச்சல் வாழ்க்கை என்பது, மனித இனத்துடன் ஒன்றிப்போன ஒன்று. அந்த வாழ்க்கையை மனித இனம் படிப்படியாக இழந்து வரும் நிலையில், அதன் முக்கியத்துவத்தை, கொடை காடு நாவல் மீண்டும் நமக்கு உயிர்ப்பித்து தருகிறது. -நா.முத்துகுமார். நன்றி: தினமலர், 29/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *