தவிக்குதே தவிக்குதே
தவிக்குதே தவிக்குதே, பாரதி தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 223, விலை 110ரூ.
ஜீவராசிகளின் உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீர் உலகமயச்சூழலில் வணிகமயமாகிப் போனதைக் கவலையுடனும், தீர்வுகளுடனும் முன் வைக்கும் நூல். இயற்கையின் கொடையாள தண்ணீரை வணிகமயமாக்கியதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியலை நூலாசிரியர் விளக்கியுள்ளார். நாடு முழுவதும் அரசு தனியார் கூட்டில் உருவாகும் குடிநீர்த் திட்டத்தில் கொள்ளை லாபம் அடிக்கும் பன்னாட்டு, தனியார் நிறுவனங்களின் முகத்திரையைக் கிழிக்கும் ஆசிரியர், அதற்குத் துணை போகும் மத்திய, மாநில அரசுகளையும் சாடியுள்ளார். அடிப்படைத் தேவையான குடிநீரை மக்களுக்கு அளிப்பது அரசின் கடமை என்பதைப் பதிவு செய்துள்ளார். நகரங்களின் வானுயர்ந்த கட்டிடங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சொகுசு நட்சத்திர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் ராட்சச ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதாளத்திற்குச் சென்றுவிட்டதை சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள நிலையை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். நிலத்தடி நீர் குறைவதால் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்திருப்பதையும் எச்சரித்துள்ளார். ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஆறுகள், சிற்றோடைகள், வாய்க்கால்கள் ஆகியவை நிலத்தடி நீரைப் பாதுகாக்க, காலங்காலமாகப் பயன்பட்டு வந்தன. தற்போது நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டிடங்களைக் கட்டுவதால், நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியவில்லை. அரசின் பல கட்டிடங்கள் நீர் நிலைகளின் மீது கட்டப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஏற்றுமதி பொருள்களின் உற்பத்திக்காக மறைநீர் (வெர்சூவல் வாட்டர்) பயன்படுவது குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார். பல வெளிநாடுகள் குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் உற்பத்திப் பொருள்களைத் தங்கள் நாடுகளில் உற்பத்தி செய்து கொள்கின்றன. அதிக அளவு தண்ணீர் தேவைப்படும் பொருள்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மறைமுகமாகத் தண்ணீரைச் சுரண்டுகின்றன. இவ்வாறு மறைநீர் வடிவில் வெளியேறும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரின் அளவை அறியும்போது பிரமிப்பும், அச்சமும் ஏற்படுகிறது. தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தனிமனிதர்களும், அரசாங்கமும் செய்ய வேண்டிய உடனடிப் பணிகளை முனமொழிகிறது இந்நூல். -நன்றி: தினமணி, 28/4/2014.