மாற்றங்களை ஏற்போம்
மாற்றங்களை ஏற்போம், மனிதத் தேனீ பதிப்பகம், விலை 50ரூ.
புகழ்பெற்ற பேச்சாளரான மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் ஆற்றிய முக்கிய சொற்பொழிவுகளின் சுருக்கங்கள் அடங்கிய புத்தகம். சொற்பொழிவுகளின் இடையே தமிழ்நாட்டின் சிறப்புகள், அவ்வையார், கம்பர், பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜ், சி.பா. ஆதித்தனார், கருமுத்து தியாகராச செட்டியார் போன்ற சான்றோர்களின் சாதனைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.
—-
குதிப்பு மீன் போனது எங்கே?, நிகழ்காலம் தமிழ்நாட்டில் பருவ நிலைமாற்றம், பொன். தனசேகரன், கார்த்திலியா வெளியீடு.
பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பேசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. 10 கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. முதல் கட்டுரை, குதிப்பு மீன்களின் அழிவு பற்றியது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட வாசிகளின் உணவு பழக்கத்தில், இந்த மீன் பெற்றிருந்த செல்வாக்கையும், தற்போது அதன் அழிவு நிலையையும் பதிவு செய்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் தேன் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி மற்றொரு கட்டுரை பேசுகிறது. தேன், இனி கசக்கும் என்ற உண்மையை பதிவு செய்துள்ளது. இதுபோல், சமகாலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி துல்லியமான தகவல் சார்ந்து, அனைத்து கட்டுரைகளும் பேசுகின்றன. புள்ளிவிவரங்களும் தொகுக்கப்பட்டள்ளன. கட்டுரைகளுக்குள் உயிர்த்துடிப்பாக, அனுபவ பேட்டிகள் அமைந்துள்ளன. தமிழக வாழ்நிலையில் உலக அளவிலான சிந்தனை போக்கை வளர்ப்பதற்கான முயற்சியாக இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன. கட்டுரைகள், பல இதழ்களில் பிரசுரமானவை. தினமலர் நாளிதழில் வெளியான ஒன்றும், தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. பருவநிலை மாற்றம் சார்ந்த தமிழ் கலைச்சொற்கள் தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக முயற்சி முக்கியமானது. வரவேற்கத்தக்கது. தமிழக சிந்தனை போக்கில், மாற்றத்தை ஏற்படுத்துவது. ‘அடுத்தடுத்து விளைச்சல் சரியாக இல்லாததால், வருமானமும் இல்லை. வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் வழியில்லை. மீண்டும் மீண்டும் விவசாயத்தில் நஷ்டம். கடன் கொடுத்தவரிடம் இருந்து வந்த நெருக்கடி, ஹனுமந்து உயிரை பலி வாங்கிவிட்டது.’ -பொன். தனசேகரன், (பக்.86) -அமுதன். நன்றி:தினமலர், 29/6/2014.