நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 308, விலை 260ரூ.
நெல்சன் மண்டேலாவை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் என்றோ, ஒரு போராளி என்றோ ஒரு சில வார்த்தைகளில் கூறிவிட முடியாது. நிற வெறியை எதிர்த்து தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களுக்காகப் பெரும் போராட்டமே நடத்தி, அதில் வெற்றியும் கண்டு, அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிய ஒரு மாமனிதர், ஒரு தியாகி. மண்டேலா சிறையில் இருந்தபோது அவரால் எழுதப்பட்டு ரகசியமாக வெளியில் அனுப்பப்பட்டு, அது சுதந்திரத்தை நோக்கி நெடும் பயணம் என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்த அவரது சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கல்வியின் மீது கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக நெல்சன் மண்டேலா, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும்போதுகூட, தேர்வு எழுத அனுமதி பெற்று சட்டத் தேர்வு எழுதினார். அதில் வெற்றியும் பெற்றார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டபோது அவர் சட்டத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்ட செய்தியும் வந்தது. குற்றவாளி ஒரு வழக்குரைஞராகச் சிறைக்குள் நுழைந்தார் என்கிறார் நூலாசிரியர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நூல் முழுக்க இத்தகைய சுவையான செய்திகள் அடங்கியிருப்பது சிறப்பு. நன்றி: தினமணி, 6/1/2015