நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை

நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை, வெள்உவன், தமிழினி, சென்னை, விலை 80ரூ.

பண்பாட்டை அறிய உதவும் சொற்கள் மொழி என்றாலே பேசு எனப் பொருள் கொள்ளலாம். ஆனால் இன்று மொழி, பேச்சு, எழுத்து என இரு வடிவங்களில் வெளிப்படுகிறது. எழுத்து வடிவத்திற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பேச்சுக்கு எல்லைகள் இல்லை ஆக பேச்சு வடிவத்தில் மொழி அதன் அத்தனை சாத்தியங்களையும் கண்டடைய முயலும். ஒவ்வொரு பகுதிக்கும் தமிழ் ஒரு தனித்த மொழி வெள்ப்பாட்டைக் கொண்டுள்ளது. அதை வட்டார வழக்கு என்கிறோம். இவ்வட்டார வழக்குகளை ஆராய்வதன் மூலம் தட்டுப்படும் சில வட்டாரச் சொற்களில் மானுட, சமூகப் பண்பாட்டு வரலாற்றுக்கான ஒரு சான்றைக் கண்டுவிடவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் நமது பண்பாட்டுத் தளத்தை முழுமையாக அறிய வட்டார வழக்குகள் முக்கியமானவை. நகர்ப்புறக் குடியேற்றம் போன்ற சில தவிர்க்க முடியாத சமூக நிகழ்வுகளால் வட்டார வழக்குகளின் பயன்பாடு மெல்ல அருகி வருகிறது. இந்தத் தலைமுறையினர் பலரும் பொதுத் தமிழ் என்ற ஒரு புது வழக்கையே பேசி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வட்டார வழக்குச் சொற்களைத் தொகுப்பது அவசியம். முதலில் வட்டார வழக்கு அகராதியை கி. ராஜநாராயணன்தான் உருவாக்கினார் (கரிசல் வட்டார வழக்கு அகராதி). அதைத் தொடர்ந்து எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன், பேரா. அ.கா. பெருமாள் ஆகியோர் முறையே கொங்கு, கடலூர், நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதிகளைத் தொகுத்தனர். இந்த வரிசையில் வெள் உவன் நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதியைத் தொகுத்தளித்துள்ளார். நெல்லைப் பகுதியில் சில ஆண்டுகளாக மேற்கொண்ட கள ஆய்வின் மூலம் இந்தச் சொல்லகராதி தயாரிக்கப்பட்டுள்ளது. தன் காலத்தில் பயன்பட்டுவந்த ஒரு வட்டார வழக்குச் சொல் காலத்தில் மறைந்துபோக அதை ஞாபகங்களால் மீட்டெடுக்க முயன்று, கள ஆய்வுகளின் மூலம் கண்டடைகிறார் வெள் உவன். நெல்லைச் சீமை என்பது இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கரிசல் பகுதியையும் உள்ளடக்கியது. வெள் உவன் நெல்லைப் பகுதியை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார். பல வட்டார வழக்குச் சொற்கள் கரிசலுக்கும் நெல்லைக்கும் பொதுவானவையே. சில சொற்கள் மூலம் அவை தொடர்பான சொல் வழக்குக் கதைகள் நினைவுக்கு வருகின்றன. சில சொற்கள் நெல்லைப் பகுதியில் வழங்கப்பட்டுவந்த சடங்குகளுக்குச் சான்றாக இருக்கின்றன. உதாரணம் துடுப்புக்குழி என்ற சொல். குழந்தைப் பேறு முடிந்து, வீட்டின் பின்புறம் அந்த நஞ்சையும் கொடியையும் குழி தோண்டிப் புதைத்து, அந்த இடத்தை வேலியிட்டு மறைப்பது வழக்கம். அந்த இடத்தில் தாய், பதினாறு தீட்டுக் கழியும் வரை குளிக்க வேண்டும் என்பது சடங்கு. அந்தக் குழியை யோனி தெய்வத்தின் வடிவமாக வணங்குவதாகப் பேராசிரியர் தொ. பரமசிவன் பண்பாட்டு அசைவுகள் நூலில் குறிப்பிடுகிறார். சில சொற்கள் தமிழ் ஆதிக் குடிகளின் பண்பாட்டுத் தொடர்பையும் விளக்குவதாக பேரா. டி. தருமராஜன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். உதாரணமாக taboo (விலக்கு) என்ற மானுடவியல் புழங்கு சொல்லுக்கும் நெல்லை வழக்கில் உள்ள தப்புறது (விதிவிலக்கானது) என்ற சொல்லுக்கும் தொடர்பிருக்கலாம் என்கிறார். இந்தச் சொல்லுக்கு இணையாக தப்பு என்ற நெல்லைச் சொல்லைப் பரிந்துரைக்கிறார். இப்படிப் பல வேற்று மொழிச் சொல்லுக்கு இணையாகத் தமிழ்ச் சொல்லை நாம் வட்டார வழக்கின் மூலம் பெற முடியும். திசையைக் குறிக்கும் லெக்கு ஒரே வீட்டில் பெண் எடுத்தவர்கள் தங்களுக்குள் விளிக்கும் சகலப்பாடி, சௌகர்யத்தைக் குறிக்கும் தோது போன்ற சில சொற்கள் நெல்லையின் தனித்துவமான சொற்கள். இவை இன்றைக்குப் பயன்பாட்டில் இருந்து மறைந்து வருபவை. ஆண் குழந்தையின் பிறப்புறுப்பு சக்கர என நெல்லைப் பகுதியில் வழங்கப்பட்டு வந்தது. இந்த சொல்லின் மூலம் கரும்பு சக்கரை என அறிய முடிகிறது. இம்மாதிரியான சொற்களின் மூலம் இந்நூலில் தொகுக்கப்பட்டிருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். பின் இணைப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கும் பழமொழிகளில் பெரும்பாலானவை தனித்துவ மற்றவை. ஓர் அரசோ நிறுவனமோ செய்ய வேண்டிய இந்தக் காரியத்தை வெள் உவன் ஆர்வத்தால் தனியொருவனாகச் செய்திருக்கிறார். அவரது அரும்பணி பாராட்டத்தக்கது. -மண்குதிரை. நன்றி: தி இந்து, 28/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *