நேசமணியின் வாழ்வும் பணியும்
நேசமணியின் வாழ்வும் பணியும், ஜி.ஐசக் அருள்தாஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 174, விலை 130ரூ.
தமிழகத்துக்கு கன்னியாகுமரி என்றொரு மாவட்டம் கிடைக்கவும், கேரள மாநிலத்திலிருந்து அம்மாவட்டப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கவும் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் முக்கியமானதும் முதலாவதுமான பெயர் நேசமணி, அவரது இளைப்பாறல் இல்லாத போராட்டத்தின் மூலம்தான் தமிழகத்தின் தெற்கு எல்லை நெல்லை என்ற வரையறையில் இருந்தது, கன்னியாகுமரிவரை நீண்டது. தனது வாழ்வை, தனக்கு மட்டுமே பயனுள்ளது என்ற அளவில் தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல், தான் பிறந்த மண்ணின் தென் எல்லையை விரிவுபடுத்தவும், ஆதிக்க – சாதீயம், அறியாமை போன்ற சக்திகளின் பிடிகளிலிருந்து தனது மக்களை மீட்கவும் பயன்படுத்தியவர் அவர். அதனால்தான் இன்றளவும் மார்ஷல் நேசமணி, அப்பச்சி, குமரித் தந்தை என்றெல்லாம் பல்வேறு அன்புப் பெயர்களில் அழைக்கப்படுகிறார். ஊழல் இல்லா அரசியல்வாதியாகவும், உண்மையான சமூகத் தொண்டராகவும், வசதியை எதிர்பார்த்து வழக்குகளை ஏற்காமல் நீதி, நியாயத்துக்காகவும் மட்டுமே போராடிய வழக்குரைஞராகவும் என, அவரது பன்முகங்கள் நம்மை வியக்கவைக்கின்றன. அன்றைய அரசியல் நிலவரத்தையும், மொழி-மண் ஆகியவற்றுக்கான நடைபெற்ற போராட்டத்தையும் உள்ளது உள்ளவாறும் நாவலுக்குரிய சுவாரசியத்துடனும் எளிய நடையில் படைத்துள்ளார் நூலாசிரியர். நன்றி: தினமணி, 17/11/2014.