நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்
நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ.
தராசுத் தட்டில் நேருவின் பதினெட்டு ஆண்டுகால ஆட்சியை நிறுத்திப் பார்க்கும் முயற்சி இது. புத்தகத்தின் சிறப்பான பகுதிகள் சில – சட்டமேதை அம்பேத்கர் மொழிவாரி மாநிலம் என்ற பதத்துக்கு ஒரு மாநிலத்துக்கு ஒரு மொழி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கவனியுங்கள். ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் இல்லை. அதாவது பிரிக்கப்படும் பகுதியில் பல மொழிகள் இருந்தாலும் ஆட்சியின் நிர்வாக வசதிக்காக அவற்றில் ஒரு மொழி ஆட்சிமொழியாக இருக்கலாம் என்பது அவருடைய கருத்து (பக். 75). அம்பேத்கர் பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிற பலரும் அவருடைய தீட்சண்யமான பார்வையை எடுத்துச் சொல்வதில்லை. ஆனால் ரமணன் சரியாக பதிவு செய்திருக்கிறார். 1938இல் விடுதலையான ஷேக் அப்துல்லா அன்று நடத்தப்பட்ட பேரணியில் பேசும்போது தன்னுடைய முஸ்லிம் கான்பரன்ஸ் கட்சி இனிமேல் நேஷனல் கான்பரன்ஸ் என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார். சமஸ்தானத்தில் உள்ள இந்து, சீக்கியர் உள்ளிட்ட மற்ற இனத்தவருடனும் இணைந்து மன்னராட்சியை ஒழிக்க கட்சி பாடுபடும் என்று அறிவித்தார். இந்தப் பெயர் மாற்றத்துக்கான யோசனையை சொன்னவர் நேரு என்பது பலருக்குத் தெரியாத உண்மை (பக். 83). பண்டித நேருவை முஸ்லிம்களின் ஆதரவாளராகச் சித்தரிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இருட்டில் ரமணனின் எழுத்து ஓரளவு வெளிச்சத்தைக் காட்டுகிறது. பொதுவாக நேருவின் புகழைப் பாடுவது என்றால் பட்டேலை மட்டம் தட்டுவதும், பட்டேலின் பெருமையைச் சொல்லும்போது நேருவின் குறைகளை அடுக்குவதும் இன்றைய அரசியல் மரபாகிவிட்டது. ஆனால் ரமணனுடைய நடையில் அந்தக் குறையில்லை. – சுப்பு. நன்றி: கல்கி, 15/2/2015.