ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும், வெ. இறையன்பு, ஐ.எஸ்.ஏ., நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 221, விலை 140ரூ.
எழுத்தாலும், பேச்சாலும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வரும் இந்நூலாசிரியர், பிரபலமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர். இவரது இந்நூல் இதுவரை 6 பதிப்புகளைக் கண்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் குறித்து போதிய விபரங்கள் இல்லாததால், இத்தேர்வில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்தது. இந்நிலையில் இயதம் பேசுகிறது வார இதழில இத்தேர்வு குறித்த தகவல்களை இந்நூலாசிரியர் தொடராக எழுதியது, பரவலாகப் பலர் நடுவே நம்பிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அதன் தொகுப்பே இந்நூல். இத்தேர்வு எழுதத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, தரப்படும் வாய்ப்புகள், இடஒதுக்கீடுகள் உள்பட அடிப்படை விபரங்கள் பல இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தவிர, இத்தேர்வு எத்தனை கட்டங்களாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள தேர்வு முறைகள் என்ன, இறுதியில் தேர்வாளர்கள் எப்படி, என்னென்ன பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று ஒவ்வொன்றையும் எளிமையாக கூறுவதோடு, இத்தேர்வுக்கான சில எளிய பயிற்சி முறைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலப் புலமையும், தேர்ந்த அறிவும் உள்ளவர்கள்தான் இத்தேர்வை எழுத முடியும் என்றிருந்த அவநம்பிக்கையை மாற்றி, தமிழ்வழிக் கல்வி கற்றவர்களும் இத்தேர்வை எழுதி தேர்வு பெறலாம் என்ற நம்பிக்கையை இந்நூல் ஏற்படுத்துவது பாராட்டத்தக்கது. நன்றி: துக்ளக், 4/2/2015.