நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்
நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும், முருகப்பன். ஜெசி,இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம், விலை 200ரூ.
சக மனிதனை ஓர் உயிராகக்கூட மதிக்காமல் நாகரிகச் சமூகமாக ஆகிக்கொண்டு இருக்கிறோம். சக மனிதனை எத்தகைய அநாகரிகமாக நடத்துகிறோம் என்பதை அம்பலப்படுத்தும் புத்தகம் இது. தீண்டாமை ஒழிப்புச் சட்டம், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று ஒவ்வொன்றாக உருவாக்கப்பட்டு 58 ஆண்டுகள் ஆன பிறகும் தீண்டாமை இருக்கிறது. வன்கொடுமை இருக்கிறது. பலாத்காரம் நடக்கிறது என்றால், வெறும் சட்டங்களால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதே யதார்த்தம். நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்கூட முறையாக, சரியாக அமலாகவில்லை என்ற வேதனையை வெளிப்படுத்துகிறது இந்த ஆய்வு. கடந்த 2007-12ம் ஆண்டுகளில் விழுப்புரம், கடலூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடந்த 500க்கும் மேற்பட்ட வன்கொடுமை நிகழ்வுகளை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள் முருகப்பனும் ஜெசியும். நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவுப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. தீண்டாமை என்பது மிகப்பெரிய குற்றம். ஆனால் அந்தக் குற்றம் சமூகத்தில் பட்டவர்த்தனமாக அமலாகி வருகிறது. இந்தச் சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்தி நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டத்தில் இருக்கிறது. ஆனாலும் கடந்த 22 ஆண்டுகளில் ஒரு காவல்துறை அதிகாரிகூட தமிழகத்தில் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஆதிக்க சக்தியினரின் பெரும்பான்மை அணி சேர்ப்பும், கூடவே அரசு மற்றம் காவல் துறையினரின் துணையும், தலித் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமையின் வீரியத்தைக் கூட்டியுள்ளது. தலித் அல்லாத அனைத்து சாதியினரும் ஓரணியில் நின்று தலித்கள் மீது வன்கொடுமை புரிவதில் தீவிரம் காட்டுகின்றனர். வன்கொடுமை நிகழ்த்தும்போது சிறுபான்மையினர் என்கிற பாகுபாடு பார்க்கப்படுவது இல்லை. ஆதிக்க சாதியினருடன் காவல் துறையினரும் இணைந்து வன்கொடுமைகள் புரியத் தயங்கியது இல்லை என்பதும் நிரூபணமாகிறது என்பதை சான்றுகளுடன் இந்த ஆய்வு நிறுவுகிறது. கிறிஸ்துவர்களாக மதம் மாறினாலும் தலித்கள் மீது மட்டும் சாதியம் தொடரவே செய்கிறது என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் இதில் உள்ளன. இதுபோன்ற விவகாரங்கள் வெடித்ததும் உடனே நீதிவிசாரணை கமிஷன்கள் அமைக்கப்படும். அந்த ஆணையங்களையும் இந்தப் புத்தகம் நடத்தப்பட்ட அனைத்து ஆணையங்களும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இனிமேல் அமைக்கப்படும் ஆணையங்களில் மனித உரிமையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை சட்டத்தை நீக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்துவரும் சூழலில், அந்தச் சட்டம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம். -புத்தகன். ஜுனியர் விகடன், 6/7/2014.