பகதூர்கான் திப்பு சுல்தான்
பகதூர்கான் திப்பு சுல்தான், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 256, விலை 120ரூ.
இந்தியாவில் தனது அரசை ஸ்தாபிக்க விரும்பும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியவர்கள், மைசூர் அரசின் மன்னர்கள் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும்தான். மராட்டியப் படைகளும், ஹைதராபாத் நிஜாம் படைகளும் ஆங்கிலப் படைகளுடன் கைகோர்த்துக் கொண்டபோதும் திப்பு சுல்தான் சமரசமாகப் போகாமல், தனது பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிவரை போராடுகிறான். திப்பு சுல்தானின் செயலின் விளைவுகள் இந்தியத்துவத்திலிருந்து விலகி மேனாட்டு நிலைக்கு உயர்வுடையதாக மாறியிருந்தது. இதுதான் ஆங்கிலேயர்கள் திப்புவைப் பார்த்து பயப்படக் காரணமாக அமைந்தது. இதனாலேயே இங்குள்ள அரசர்களுக்கும் திப்பு ஓர் அந்நியன் என்கிற மனப்பான்மை மனத்துள் ஊறியது என்கிறார் ஆசிரியர். இந்த தனிமைப்படுத்தலும், உடன் இருந்தவர்களின் சில்லறை ஆசைகளால் நிகழ்த்தப்பட்ட துரோகங்களும், திப்புவின் எழுச்சியின் மீது இங்கிருந்த மற்ற அரசர்களின் அச்சமும், அதனால் அவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட சமரசங்களும்தான் திப்புவின் வீழ்ச்சிக்கு வழிகோலின என்பதில் ஐயமில்லை. ஹைதர் அலியும், திப்புவும் முஸ்லிம்கள் என்றாலும், மற்ற மதத்தவர்களை எப்படி மதித்தார்கள், எப்படி உதவினார்கள், அவர்களின் பரந்த மனப்பான்மை எப்படிப்பட்டது என்பன போன்ற விவரங்களையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். திப்பு போன்ற மன்னர்களின் தன்மானமும், எதிர்ப்புணர்வும்தான் பின்னர் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டங்களுக்கான விதைகள் என்பதை இந்திய சமூகம் என்றைக்கும் மறக்கக்கூடாது. நன்றி: தினமணி, 22/9/2014.