பஞ்ச லட்சணதிருமுக விலாசம்

பஞ்ச லட்சணதிருமுக விலாசம், பிரமனூர் வில்லியப்ப பிள்ளை, பதிப்பாசிரியர் ம.பெ. சீனிவாசன், கவிதா பதிப்பகம், பக். 353, விலை 200ரூ.

96 வகை சிற்றிலக்கியங்களை பட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால் பிற்காலத்தில் பல்கிப் பெருகிய பல்வேறு சிற்றிலக்கியங்களில் விலாசம் உட்பட சிற்றிலக்கிய வகை 417 என்று ச.சிதம்பரம் கூறியுள்ளார். அந்த வகையில் சிற்றிலக்கியங்கள் 96 வகைதான் எனப் பாட்டியல்கள் வரையறை செய்திருப்பது பொருந்தாது என்கிறார் பதிப்பாசிரியர். அத்தகைய சிற்றிலக்கியங்களுள் ஒன்றுதான் விலாசம். அவற்றுள் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை, சிவகங்கை துரைசிங் மன்னரைப் பாட்டுரைத் தலைவனாகக் கொண்டு இயற்றியதுதான் பஞ்சலட்சணத் திருமுகவிலாசம். ஒருவர் கருத்தை ஒருவர்க்குத் தெரிவிக்கும் முறையில் எழுதியனுப்பும் கடிதத்தை முன்னாளில் திருமுகம் அல்லது முடங்கல் என்று கூறுவர், மதுரை சோமசுந்தரக் கடவுள் சேரமான் பெருமானுக்கு எழுதிய கடிதம்தான் திருமுருகம். இதனால் இது திருமுகப் பாசுரம் எனப்பட்டது. சிவபெருமான் எழுதிய திருமுகப் பாசுரத்தை அடியொற்றியே திருமுகவிலாசம் என்னும் இலக்கிய வகை தோற்றம் பெற்றுள்ளது. தாது வருடப் பஞ்சத்தால் (1876) துன்புற்ற மக்கள், மதுரை சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிட்டதாகவும், சொக்கநாதரும் மக்களின் குறை தீர்க்கும் பொருட்டுச் சிவகங்கை அரசருக்கு சிபாரிசுக் கடிதம் (திருமுகம்) கொடுத்து அனுப்பியதாகவும், அக்கடிதத்துடன் சென்ற மக்கள் மன்னரைக் கண்டு தத்தம் துன்பம் நீங்கப் பெற்றதாகவும் கதை கூறுகிறது. புலவன் ஒருவன், விறலி ஒருத்தியை முன்னிலைப்படுத்தி தன் கதையைக் கற்பனை கலந்து கூறுவதாக அமைந்துள்ள இவ்விலக்கியம் கேலியும் கிண்டலுமாகப் பாடப்பட்டுள்ளது. தாது வருடப் பஞ்சத்தைப் பாடுபொருளாகக் கொண்டதால் இந்நூல் பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் என்று பெயர் பெற்றுள்ளது. பஞ்சத்தினால் ஏழை எளிய மக்கள் பட்டபாடு, எத்திப் பிழைப்போரின் பித்தலாட்டம் ஏமாற்றுக்கார்களின் இழி செயல்கள், வியாபாரிகள், லேவாதேவிக் காரர்களின் மோசடிக்ள் போன்றவையும் கூறப்பட்டுள்ளன. இவ்விலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதுபோல அன்றிலிருந்து இன்றுவரை நம் நாடும் மக்களும் மாறாமல் இருப்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது இவ்வரிய இலக்கியம். நன்றி: தினமணி, 10/11/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *