பனியன்
பனியன், தி.வெ. இராசேந்திரன், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 304, விலை 200ரூ.
பனியன் நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களின் நிலை எப்படி இருந்தது? என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல். சென்னை போன்ற பெருநகரத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு எப்போதோ கிட்டிய உரிமைகள் – அரசால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டஇ.எஸ்.ஐ., பி.எஃப், பிடித்தம் செய்வது போன்றவைகூட அப்போது திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வீட்டு வாடகைப்படி, ஓய்வு பெறும் வயதை 58 ஆக நிர்ணயிப்பது, ஓவர் டைம் செய்தால் உணவுப்படி, அனைத்து அரச விடுமுறைகளுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு போன்றவை கூட அப்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தக் கோரிக்கைகளுக்காக 1984 ஆகஸ்ட் 19 முதல் தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் 127 நாள்கள் நடந்தது. அந்தப் போராட்ட நிகழ்வுகளை மிக எளிமையாகச் சித்திரிக்கிறது இந்த நாவல். அன்றைய திருப்பூர் பனியன் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் நிலை, தொழிற்சங்கத்தின் தன்மை, முதலாளிகளின் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை, சுயநலமற்ற தியாகமே உருவான தொழிற்சங்கத் தலைவர் என நூலாசிரியர் இந்நாவலில் பதிவு செய்திருப்பது, இன்றைய தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தினருக்கு பயனுள்ள பல தகவல்களை, படிப்பினைகளை வழங்குவதாக இருக்கிறது. நன்றி: தினமணி, 6/7/2015.