பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே
பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, முனைவர் துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, சென்னை – 42, விலை 700 ரூ.
தமிழின் தொன்மையான சங்கப்பாடல்கள் அனைத்தும் நாட்டுப்புறப்பாடல்களே. இவை பாணர்களோ, புலவர்களோ பாடியது அல்ல. அவை அனைத்தும் மக்கள் பாடியவை. சங்ககாலப் புலவர்கள் எனக் கூறப்படும் புலவர் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. சமணர்கள் தமிழகம் வந்து தங்கள் மதத்தைப் பரப்ப முற்பட்டபோது மக்கள் (தமிழ்) மொழியில் புழங்கிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர். இதுவே பின்னர் சங்க இலக்கியம் என அழைக்கப்பெற்றது. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, நெடுந்தொகை ஆகியவை சரியாக 400 பாடல்கள் கொண்டு மொத்தம் 1600 என்பது தவறு. ஒரு நெடிய காலகட்டத்தில் அவ்வாறு சம எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியிருக்க இயலாது. அவற்றில் இடைச் செருகல்களாகப் பல பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டு முழுமை எண்களாக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பாடல்களை ஆய்ந்து பார்க்கையில் சுமார் 400க்கும் அதிகமான பாடல்கள் இடைச் செருகல்கள் எனத் தெரியவருகிறது. அதேபோல சங்ககாலம் என்பதும் பின்னர் வந்த வைதீக மரபினர் புனைந்து உருவாக்கியது ஆகும். சங்க காலங்கள் குறித்த கால வரையறைகளும் நம்புதற்குரியது அல்ல. திணை துறை வகையறைகளும் முன்னர் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. சங்கப் பாடல்கள் காலத்தில் பரத்தையர் (பொதுமகளிர்) இருந்ததில்லை. இதுவும் பின்னர் வைதிக மதம் உருவான காலத்தில் உருவான பழக்கம்… இப்படி எண்ணற்ற ஆய்வு முடிவுகளுடன் ‘பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்களே’ எனும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. சமணர்களும் அவர்கள் பங்களிப்பும் குறித்த தொடர்ந்த ஆய்வில் ஈடுபட்டு வரும் முனைவர் துளசி. இராமசாமியின் விடாத ஆய்வுகளின் விளைவாக உருவாகியுள்ள இப்புத்தகத்தை, விழிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் நெடுங்காலமாகவே கரடு தட்டிப்போயிருந்த நிலையில் நா. வானமாமலை தொடங்கிய ஆய்வு மறுமலர்ச்சியில் விளைந்த கா. சிவத்தம்பி போன்றவர்கள் சில முக்கிய ஆய்வுகளை யாரும் முன் வைக்கவில்லை. இருந்தபோதும் இந்த ஆய்வு முடிவுகளை நோக்கி ஆய்வாளர் செலுத்தியுள்ள உழைப்பு பிரமிக்கத்தக்கது. இன்னமும் அதிகப்படியான கவனத்துடன் அறிவியல்பூர்வமான சான்றாதாரங்களைத் திரட்டி ஆய்வுகளை மேற்கொண்டால் இவற்றில் பல முடிவுகளை முழுமையாக நிறுவுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
—
SITUATIONAL GRAMMAR, M I DUBROVIN, NCBH வெளியீடு, விலை 250 ரூ.
குழந்தைகளுக்கு வகுப்பறைகளை மிகக் கடினமாக்கும் தருணம் கணிதம், மற்றும் இயற்பியல், வேதியியல் வகுப்புகள் மட்டுமல்ல. அதைவிட வேப்பங்காயாகக் கசக்க வைப்பது இலக்கணம், அதிலும் ஆங்கில இலக்கணம். மிக மிகக் கசப்பு. ஆங்கிலமே சர்வதேச பரிபாஷை ஆகிவிட்ட நிலையில் இலக்கண சுத்தமாகக் கற்பித்தல் என்பதே இன்று கார்ப்பரேட் வர்த்தமாக மாறிவிட்டது. ஆனால் அன்றைய சோவியத் யூனியனிலும் இத்தகைய பிரச்சினை இருந்திருக்கும் போலும். இதைச் சவாலாக எடுத்துக்கொண்ட எம். ஐ. துப்ரோவின் என்பவர், ‘அட இவ்வளவுதானா, ஆங்கில இலக்கணம்’ என வியக்க வைக்கும் வகையில் வண்ணப்படங்களுடன் ஆங்கில இலக்கணப் பாடங்களை எழுதி, அன்றைய சோவியத் யூனியனின் முன்னேற்றப் பதிப்பகம் காலிகோ நூல் கட்டுமான அமைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்திருந்ததை இன்று நாற்பது வயதில் இருப்பவர்கள் மறந்திருக்க முடியாது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அப்புத்தகத்துக்கு மீண்டும் உயிர் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பதின்ம வயதில் உள்ள ஒவ்வொரு மாணாக்கரிடம் இருக்கவேண்டிய அரிய புத்தகம் இது. நன்றி: த சண்டே இந்தியன், 28-10-2012