பாடங்கள் படிப்பினைகள்
பாடங்கள் படிப்பினைகள், டாக்டர் எஸ். ஜீவராஜன், ஆனந்த நிலையம், சென்னை, பக். 19, விலை 90ரூ.
இந்த நூலின் நூலாசிரியர் டாக்டர் எஸ். ஜீவராஜன் பாலியல் நிபுணர். மருத்துவம் தொடர்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனால் அவரின் இந்தப் புத்தகம் அவரது வழக்கமான படைப்புகளில் இருந்து சிறிது வித்தியாசப்பட்டுள்ளது. தன் வாழ்வில் சந்தித்த, படித்த சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்துள்ளார். சளித் தொல்லையில் மூச்சுத் திணறி அழுதபடியே இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உடுக்கை அடிப்பவரை அழைத்து வந்து பூஜை செய்தனர் அதன் பெற்றோர். இறுதியில் அந்தக் குழந்தையின் அழுகை நின்று பெற்றோரின் அழுகை தொடங்கியது என்று கூறுகிறார். இந்த நவநாகரிக காலத்திலும் மாதவிடாய் சமயத்தில் மருமகை வீட்டிற்குள் புழுங்க விடாமல் தடுக்கும் மாமியார், சிடுசிடுக்கும் மாமனாரை, புன்னகையால் சமாளிக்கும் மருமகள் என சிறப்பான சம்பவங்களை எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் தன் அம்மாவை ஏதோ கூறிவிட்டார் என்று மாமியாரிடம் இருந்து தன் கணவனை பிரித்த மருமகளின் செயலை அவரின் சாமர்த்தியம் போன்று சித்திரித்திருப்பது உள்ளிட்ட சில சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம். ஒரு பக்கத்தில் ஒரு சம்பவம் என மொத்தம் 184 சம்பவங்களை இதில் கூறியிருக்கிறார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பழக்கப்பட்ட சிந்தனை முறைக்கு எதிராகவும் எழுதப்பட்ட நூல். நன்றி: தினமணி, 8/9/2014.