பாவேந்தம்(25 தொகுதிகள்)
பாவேந்தம்(25 தொகுதிகள்), தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 17, விலை 6800ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-1.html
பாரதிக்கு சீனி.விசுவநாதனைப் போல், பாரதிதாசனுக்கு கோ. இளவழகன்- தான் எழுதிய மொத்தக் கவிதைகளையும் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே அழகிய புத்தகமாக பார்க்க ஆசைப்பட்டனர் பாரதியும், பாரதிதாசனும். பாரதியின் கனவைச் சில ஆண்டுகளுக்கு முன் சீனி.விசுவநாதன் நிறைவேற்றினார். பாரதிதாசனின் விருப்பம் இப்போதுதான் நிறைவேறியுள்ளது. தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும். என்றவர் பாரதிதாசன். அப்படிப்பட்ட தமிழ் வாழ்க்கை வாழ்ந்தவர். மயிலம் சுப்பிரமணியர் துதியமுது எழுதிக்கொண்டிருந்த கனகசுப்புரத்தினத்தை, சமூக சீர்த்திருத்தக் கொள்கையின் பக்கம் திருப்பியவர் பாரதி. பின்னர், பார்ப்பன எதிர்ப்புக்கொண்ட பெரியாரின் இயக்கத்தில் தன்னை பாரதிதாசன் இணைத்துக்கொண்ட பிறகும், பாரதிக்கு நான் தாசன்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லி கடைசி வரை தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ளவில்லை. உயர்ந்த எண்ணங்களை எளிய சொற்களில் கொடுக்கும் தமிழ்க் கவிதை மரபு இவர்கள் இருவரிடம் இருந்தே தொடங்கியது. பாரதியைத் தாண்டி இயக்க நடவடிக்கைகளிலும் இறங்கியதால், பாரதிதாசனுக்குக் கூடுதல் கவனம், அவர் வாழ்ந்த காலத்திலேயே கிடைத்தது. சலுகை போனால் போகட்டும் – என் அலுவல் போனால் போகட்டும். தலைமுறை ஒருகோடி கண்ட என் தமிழ் விடுதலை ஆகட்டும் – என்ற எழுச்சியும் ஏடெடுத்தேன் கவி ஒன்று தொடுக்க என்னை எழுதென்றது சொன்னது வான் – என்ற அழகியலும் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா.. என்ற இசையிலும் சேர்ந்ததுதான் பாவேந்தம். பண்டிதர் வசம் இருந்த தமிழை பாமரர் மனதுக்குள் கொண்டுவந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளைத் தனது எழுத்தால் ஆட்சி செய்தவர் பாவேந்தர். இலக்கணம் தெரியாமல் கவிதை எழுதியவர்கள் மத்தியில் இலக்கணத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். இசை அறிவே இல்லாமல் பாடல்கள் எழுதியவர் மத்தியில், அருமையாகப் பாடவும் தெரிந்தவர். அத்தகைய பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளும் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதுவரை அச்சில் வராத பாடல்களும், அவரது கட்டுரைகளும் முதன்முதலாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்க் கலை உயர்ந்ததாக இருக்க வேண்டுமானால், கலைக்குக் காரணமான எண்ணங்களும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். இழிவான கதை, கலையானால் அக்கலை எப்படி உயர்ந்ததாகும்? கலை என்பது புலவன் உள்ளத்திலே தோன்றி மலரும் எழுச்சி என்று பேசியவர் பாரதிதாசன். அத்தகைய எழுச்சியை ஊட்டுவதற்காகவே தனது வாழ்க்கையை வடிவமைத்தவர். தமிழ் படி, தமிழ் பேசு, தமிழ் எழுது, கொடுமை கண்ட விடத்து எதிர்த்துப் போராடு. யாரேனும் தமிழைப் பழித்தால் லேசில் விடாதே. அச்சமின்மையை வளர் என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார். அவர் கவிதைகள் மீண்டும் பரவவேண்டிய காலகட்டத்தில் இந்தத் தொகுப்பு வந்துள்ளது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 8/5/13.