புத்தக அறிமுகங்கள் – 8.4.2012 – தினமலர்
வாழ்வை நெறிப்படுத்தும் புத்தரின் போதனைகள் ஆசிரியர்: சிவ நாகேந்திர பாபு, வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17. விலை: 45 ரூ, பக்கம்: 128. திரிபிடகம், பொருளாதாரச் சிந்தனைகள் முடிய 50 தலைப்புகளில் புத்தரின் உபதேசங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நான்கு உன்னத உண்மைகள் மனத்தில் பதிந்தது. பலரும் புத்தமதத்தைத் தழுவவும், இந்நாளில் புத்தரின் போதனைகள் அனைவரும் படித்துப் பயன் பெறலாமே. திருமந்திரம் – சில பாடல்கள் விளக்க உரையுடன் கிநா.செநா. துரை அந்தமான் சித்தர், திருச்சித்து வெளிக்கூடம், எம்பி 281, பொங்கிச்சாங் போர்ட்பிளேயர், அந்தமான் – 744101. பக்கம்: 68, விலை: ரூ 99. சில பாடல்களுக்கு விளக்கவுரை என்பதற்கொப்ப, 114 பாடல்களுக்கு எளிய விளக்கம் அளித்துள்ளார். திருமந்திரத்தால் ஈடுபட்டுள்ளவர்கள் படித்து மகிழலாம். (விமர்சித்தவர்: எஸ். திருமலை.) எவரெஸ்ட் கொடியில் வெற்றிக்கொடி நாட்டினேன் –டென்சிங் ஆசிரியர்: ஆர்.சி. சம்பத், வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை – 17, விலை ரூ 50, பக்கம்: 96. ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எழுதப் படிக்கத் தெரியாதவர்கூட, கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால், உலகப் புகழ் பெற முடியும் என்பதை நிரூபித்த ஒரு வெற்றியாளனின் சரித்திரம். நேபாளத்தில் பிறந்து, இந்தியாவில் மேற்கு வங்கத்திலே வளர்ந்த, நேபாள இளைஞன் டென்சிங், எழுத்தறிவற்றவன். மலை ஏறும் பயிற்சியும், மன உறுதியும் கொண்டு, அந்த எவரெஸ்ட்டை நோக்கி ஏறி, அதன் உச்சியில் கம்பீரமாக நின்றான். தடை பல கடந்து, தனிச் சரித்திரம் படைத்த டென்சிங்கின் வீர வரலாறு! (விமர்சித்தவர்: எஸ். குரு) விருந்தும் மருந்தும் பேரா. இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ 70, பக்கம் 168. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணி புரிந்து, நூலாசிரியர் டாக்டர் மு.வவின் அன்பிற்குப் பாத்திரமானவர். ஆழமான சிந்தைகளின், வெளிப்பாடாக உள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பில், அரசியல், ஆன்மிகம், இலக்கியம், தனிமனிதர்களின் நற்குணங்கள் தொடர்பான விஷயங்கள் நிறைய உள்ளன. எல்லாமே வாழ்க்கைக்கும், அதனை வளப்படுத்திக் கொள்வதற்கும், வழி சொல்லும் கட்டுரைகள். இவையனைத்தும் இலக்கியம், சுவை எனும் தேனில் குழைத்து வழங்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. (விமர்சித்தவர்: ஜனகன்) இங்கிலாந்து மலர் மருந்துகள் (பாகம்1) டாக்டர் வி. கிருஷ்ண மூர்த்தி, ராமன் ஹவுஸ், 21 குப்பையா தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33. பக்கம் 196, விலை ரூ 75. லண்டனைச் சேர்ந்த அலோபதி டாக்டர் கண்டுபிடித்த மலர் மருந்துகளையும், அவற்றின் பயன்களையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர். “நாம் கற்ற விஷயங்களை சரியாகத் தெரிந்துகொள்ளும் வழியை இங்கிலாந்து காட்டில் ஒரே ஒரு இடத்தில் முப்பத்தெட்டு காட்டு மலர்கள் மூலமாக இறைவன் கொடுத்துள்ளார்” என்கிறார் ஆசிரியர். இவை மருத்துவ அறிவு இல்லாத பாமர மக்கள் உபயோகத்திற்குத்தான் எனப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. கெட்ட பழகத்தை கைவிட, இந்த மருத்துவ முறையில் ‘வால்நட்’ என்ற மருந்து உள்ளது. இந்தியாவில் இது கிடைக்கிறது. இப்படி மலர் மருந்துகளால் பயனடைந்தவர்களின் அனுபவங்களும் உள்ளன.