மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை)
மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை), முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், சென்னை – 29, பக்கம் 704, விலை 300ரூ.
இத்தனை நாள்களாக இப்படியொரு, ‘பெண்புலவர் களஞ்சியம்’ வெளிவராதா என்று ஏங்கியவர்களின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது இந்நூல். நூலகங்களில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய பெண்பாற் புலவர்கள் பற்றிய தகவல்களைக் களஞ்சியமாக்கியிருக்கிறார் நூலாசிரியை. அட்டைப்படமே அசத்துகிறது. நீண்ட நெடுங்காலமாக அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட ‘கயமனார்’ என்ற புலவர் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகத்தை – சர்ச்சையை இந்நூல் நிவர்த்தி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, அவரது பெயரும் படைப்புகளும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்பாற் புலவர்களைப் பற்றிய இன்றியமையாத பல செய்திகள் உள்ளன. நூலின் இறுதியில் பொருளடைவு தந்திருப்பது பாடல்களைத் தேடிப்பிடிக்கும் சிரமத்தைத் தவிர்த்துள்ளது. நூலாசிரியை தனது கடின உழைப்பால் நமக்குக் கற்கண்டுக் குவியலைத் தந்திருக்கிறார். அதிக பக்கங்கள், அரிய தகவல்கள், மிகக்குறைந்த விலை, வாய்ப்பை நழுவவிடலாமா? நன்றி: தினமணி 18-07-2011