தம்ம பதம்
தம்ம பதம், ஸ்ரீ பால சர்மா, நர்மதா பதிப்பகம், பக்கம் 160, விலை 70 ரூ.
“தம்ம பதம்” போதி மரத்து புத்தன் போதித்த வாழ்வியல் வேதம். ஞானத்தின் நுழைவாயில் எனத் துவங்கி, புத்தர் காட்டிய தியான நெறியோடு புத்தகம் நிறைவடைகிறது. 29 வயதில் இல்வாழ்க்கையைத் துறந்து, 35 வயதில் ஞானோதயம் பெற்று 80 ஆண்டுகள் நிறையப் பெற்று அருள் நெறி சார்ந்த தூய்மையான துறவு வாழ்க்கை வாழ்ந்த புத்தரின் வாழ்வியல் வேதம் தம்ம பதம். கவுதம புத்தரின் சுவையான அரிய செய்திகளோடு, புத்தபிரான் அருளிய வேத அறிவுரைகளும், சங்க விதிகளும், அவரைப் பற்றிய விவரங்களும், வரலாறுகளும் பவுத்த மதத் திருமுறைகளாக மூன்று தொகுதிகளாகப் பிரித்துள்ளார். அவற்றை, “திரி பீடகங்கள்” என்று அழைக்கின்றனர். மகாபாரதத்தில் கண்ணனின் கீதை எவ்வாறு இன்று எல்லாராலும் பேசப்படுகின்றதோ, அதனைப் போன்று புத்தரின் போதனைகளில் தம்மபதம் உலகத்தவர்களால் சிறப்பித்துப் பேசப்படுகின்றது. 40க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் தம்மபதம்.
‘கோபத்தை அன்பினால் வெல்க தீமையை நன்மையினால் வெல்க கருமியை தானத்தினால் வெல்க பொய்யை மெய்யினால் வெல்க’ பக்கம் 98
இது போன்று நூற்றுக்கணக்கான வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கி, நர்மதாவிற்கே உரிய பரிசுப்பதிப்பாக வெளிவந்துள்ளது. அற்புதமான ஞானக்கருவூலம். – குமரய்யா நன்றி: தினமலர் 16-09-12